காணாமல் போன வீடுகளை கண்டுபிடித்து தர காவல்நிலையத்தில் புகார்!

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகேயுள்ள தலையாமங்கலம் ஊராட்சியில்தான் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. கடந்த 2016ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டுவரை பிரதமரின் வீடுகட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டிக் கொள்ள 225 நபர்களுக்கு, தலையாமங்கலம் ஊராட்சியில் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.


225 பேரில் 140 பேருக்கு வீடுகட்டி தராமல், பயனாளிகள் 140 பேர்களின், பெயரில் போலி ஆவணங்கள் தயார் செய்து கணக்குக் காட்டி 5 கோடி ரூபாய் அளவில் மோசடி நடந்துள்ளது. அதேபோல் மத்திய அரசின் கழிவறை கட்டும் திட்டத்திலும், 170 நபர்களுக்கு கழிவறைகளைக் கட்டாமலே கட்டியது போல பயனாளிகளின் பெயரில் போலி ஆவணங்கள் தயார் செய்துள்ளனர்.


முன்னாள் ஊராட்சி செயலாளர் உள்ளிட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள், அதிகாரிகள் கூட்டணி அமைத்து மோசடி செய்துள்ளதாக பயனாளிகள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தலையாமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம், சேகர், இளவரசி, லட்சுமி உள்ளிட்ட 22 நபர்கள், காவல்நிலையத்தில் தனித்தனியாக இந்த மோசடி குறித்து புகார் அளித்துள்ளனர்.


அந்தப்புகாரில், “பட்டாநிலத்தில் மத்திய, மாநில அரசுகள் வழங்கிய வீடுகட்டும் திட்டத்தில் வீடுகள் கட்டப் பட்டுள்ளதாக அரசு பதிவேட்டில் பதிவாகிய நிலையில், எங்களுக்கு சொந்தமான இடத்தில் கட்டப் பட்டதாக சொல்லப்படும் வீட்டை காணவில்லை” என்று குறிப்பிட்டுள்ளனர். கட்டப்பட்டதாக சொல்லப்படும், தங்கள் வீட்டை கண்டுபிடித்துத் தருமாறு புகாரில் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.