அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள்..!!திருச்சி: சோமரசன் பேட்டையில் 9 ஆம் வகுப்பு மாணவி எரித்து கொலை

திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை அருகே அதவத்தூர்பாளையத்தில் 14 வயது சிறுமி எரித்து கொலை செய்யப்பட்டார். பெரியசாமி என்பவர் மகளை முள்ளுக்காட்டில் வைத்து எரித்துக்கொன்ற மர்மநபர்களுக்கு போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.


சில தினங்களுக்கு முன்பாக புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் 7 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்தால் ஏற்பட்ட பரபரப்பு அடங்குவதற்குள் திருச்சி மாவட்டத்தில் 14 வயது சிறுமி எரித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.


திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை அருகே அதவத்தூர்பாளையத்தில் பெரியசாமி என்பவரின் 14 வயது சிறுமி, இன்று மதியம் இயற்கை உபாதைக்காக வீட்டை விட்டு வெளியே வந்திருக்கிறார். வீட்டை விட்டு வெளியே வந்தவுடன் அவரை காணவில்லை என பெற்றோர்கள் தேடி வந்துள்ளனர்.


இந்த நிலையில் அங்குள்ள முள்ளுக்காட்டில் எரித்துக் கொல்லப்பட்டு சடலமாக கண்டெடுக்கப்பட்டு இருக்கிறார். இந்த சம்பவம் நடந்து 2 மணி நேரத்திற்கு மேலாகியும் எந்த ஒரு துப்பும் கிடைக்கவில்லை என்று காவல்துறையினர் இந்த சம்பவம் குறித்த விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.


அந்த பகுதியில் மிகவும் முள்ளுக்காடு நிறைந்த பகுதியாகும். இந்த கொலை சம்பவம் என்பது 3 மணி முதல் 5 மணி வரைக்குள் நடைபெற்றிருக்க கூடும் என்று தகவல் தெரிய வந்துள்ளது. மேலும் அப்பகுதியில் கிராம மக்கள் அதிகளவில் கூட்டம் சேர்ந்துள்ளனர். இதனையடுத்து கொலை நடந்த இடத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியா உல்ஹக் மற்றும் டி.ஐ.ஜி. ஆளி விஜயா உள்ளிட்டோர் விரைந்துள்ளனர்.


மேலும் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார் யார் என்பது இன்னும் தெரியவில்லை. இந்த நிலையில் கொலை செய்யப்பட்ட சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை ஏதேனும் நடந்திருக்க கூடுமா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். இதனையடுத்து எரித்து கொல்லப்பட்ட சிறுமியின் சடலத்தை கையக படுத்திய காவல்துறையினர், திருச்சி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.