சேமநல நிதியில் ரூ.60 லட்சம் மோசடி புகார் - குளித்தலை நகராட்சி ஆணையர் உள்பட 6 பேர் சஸ்பெண்ட்

கரூர் அருகே குளித்தலை நகராட்சியில் சேம நல நிதி, ஓய்வூதிய பங்களிப்பு தொகை ஆகியவற்றில் சுமார் 60 லட்சம் ரூபாய் மோசடி நடந்திருப்பது வருடாந்திர கணக்கு தணிக்கை ஆய்வில் தெரியவந்தது.


இதைத் தொடர்ந்து குளித்தலை நகராட்சி ஆணையர் மோகன்குமார், பெண் கணக்காளர் சத்யா மீது கரூர் மாவட்ட குற்றவியல் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் மூன்று பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இந்நிலையில் குளித்தலை நகராட்சி ஆணையர் மோகன்குமார், முன்னாள் பொறுப்பு ஆணையர் புகழேந்தி, கார்த்திகேயன், அலுவலர்கள் சரவணன், யசோதா தேவி உள்பட ஆறு பேரை பணி இடை நீக்கம் செய்து, கரூர் நகராட்சி நிர்வாக இயக்குநர் பாஸ்கர் உத்தரவிட்டுள்ளார். ஒரே நேரத்தில் ஆறு பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.