காவலர்களுக்கு மன அழுத்தத்தைக் குறைக்க 3 நாள் பயிற்சிக்கு ஏற்பாடு

கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுட்டு வரும் காவல் துறையினருக்கு மன உளைச்சல் ஏற்படுவதாக தொடர்ந்து கூறப்படுகிறது. காவல் துறையினர் மன அழுத்தத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றமும் அறிவுறுத்தியது.


அதே போல் சமீபத்தில் சாத்தான்குளம் சம்பத்தில் காவல் துறையினர் மீதான விமர்சனத்தை தொடர்ந்து காவல் துறை - பொதுமக்கள் நல்லுறவை ஏற்படுத்துவது தொடர்பாகவும் ஆலோசனை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை அசோக் நகரில் உள்ள காவலர் பயிற்சி கல்லூரி டி.ஜி.பி கரன் சின்ஹா அனைத்து மாநகர காவல் ஆணையர்கள், மாவட்ட கண்காணிப்பாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் மன அழுத்தத்தை குறைக்கும் வகையிலும், பொதுமக்களோடு காவல் துறையினருக்கு நல்லுறவை ஏற்படுத்தும் வகையில் இந்த பயற்சி வகுப்புகள் நடத்தப்படும் எனவும், அதற்கான ஏற்பாட்டை செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.


தமிழகம் முழுவதும் 1025 காவலர்களுக்கு மன அழுத்தத்தை குறைக்கும் பயிற்சி வழங்க காவலர் பயிற்சி கல்லூரி டி.ஜி.பி. கரண்சின்ஹா உத்தரவிட்டுள்ளார். தமிழகம் முழுவதும் உள்ள 13 காவலர் பயிற்சி பள்ளிகளில் ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 14-ஆம் தேதி வரை தலா 3 நாட்களுக்கு ஒரு பிரிவு என 5 பிரிவாக பயிற்சி வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.


இந்த பயிற்சியில் பொதுமக்களுடன் நல்லுறவை பேணுவது, மன அழுத்தத்தை குறைப்பது, சூழ்நிலையை கையாள்வது உள்ளிட்டவை தொடர்பாக வல்லுநர்கள், காவல் உயரதிகாரிகள் ஆகியோர் ஆலோசனை மற்றும் பயிற்சி வழங்குவார்கள் என தெரிவித்துள்ளார். முதற்கட்டமாக மாவட்ட காவல் கூடுதல் கண்காணிப்பாளர் முதல், காவலர்கள் வரை 1025 பேரை தேர்ந்தெடுத்து பயிற்சி வழங்கவும் அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. First published: July 20, 2020