இன்ஸ்பெக்டர் பாலமுரளி படத்திற்கு தமிழக டிஜிபி, சென்னை கமிஷனர் அஞ்சலி

சென்னை மாம்பலம் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த பாலமுரளி (47), கடந்த 5ம் தேதி கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டார். பின்னர் நோய் தாக்கம் தீவிரமாக இருந்ததால் ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி பாலமுரளி நேற்று முன்தினம் உயிரிழந்தார்.


பின்னர் அவரது உடல், தி.நகரில் உள்ள கண்ணம்மாபேட்டை சுடுகாட்டில் 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் நேற்று முன்தினம் இரவு அடக்கம் செய்யப்பட்டது.அதைதொடர்ந்து இன்ஸ்பெக்டர் பாலமுரளி பணியாற்றிய மாம்பலம் காவல் நிலையத்தில் நேற்று காலை படத்திறப்பு விழா நடந்தது.


அதில் டிஜிபி திரிபாதி, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், கூடுதல் கமிஷனர்கள், இணை கமிஷனர்கள் ஆகியோர் மலரஞ்சலி செலுத்தினர். அதைதொடர்ந்து மாம்பலம் காவல்நிலைய போலீசாரும் மலரஞ்சலி செலுத்தினர். தமிழகம் முழுவதும் 2 நிமிடம் அஞ்சலி: கொரோனா தொற்றால் உயிரிழந்த இன்ஸ்பெக்டர் பாலமுரளிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தமிழக காவல் துறையில் உள்ள அனைத்து போலீசாரும் ேநற்று டிஜிபி திரிபாதி உத்தரவுப்படி நேற்று மாலை 5 மணிக்கு 2 நிமிடங்கள் வரை எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர்.