மதுரை அரசு மருத்துவமனை அருகே சாக்கடை பகுதியில் உண்டு, உறங்கும் நோயாளிகளின் உறவினர்கள்

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மதுரை மட்டுமில்லாது தென் மாவட்ட மக்களின் உயர் சிகிச்சை மையமாக இருந்து வருகிறது. கொரோனா தொற்றுக்கு பின் இந்த மருத்துவமனையில் நோயாளிகளையும், நோயாளிகளின் உறவினர்களையும் அனுமதிப்பதில் பல்வேறு புகார்கள் எழுந்து வருகிறது.


இந்நிலையில் உள்நோயாளிகளுடன் வரும் உறவினர்களை பகல் முழுவதும் மருத்துவமனை வளாகத்தில் அனுமதிக்க மறுப்பதால் வெளியூரிலிருந்து வந்த பலரும் செல்ல வழியில்லாமல் மருத்துவமனை எதிரே உள்ள சாக்கடையின் மேற்பகுதியில் தங்கி உள்ளனர். துர்நாற்றம் வீசும் அந்த பகுதியில் குழந்தைகளுடன் உண்டும், உறங்கியும் பொழுதை கழித்து வருகின்றனர்.


சுற்றி நோய் சூழ்ந்திருக்கும் நிலையில் பாதுகாப்பின்றி நாள் முழுவதையும் கழித்து வரும் இவர்களின் அவலநிலைக்கு மருத்துவமனை நிர்வாகம் தீர்வு தர வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது. நோயாளிகளின் நிலையை கூட அறிந்து கொள்ள முடியாத அளவிற்கு தாங்கள் தனிமைபடுத்தப்பட்டுள்ளதாகவும், நோயாளிகளுக்கு உதவ வந்த இடத்தில் தாங்களும் நோயாளிகளாக மாறும் சூழல் உருவாகியுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.


நடந்து செல்பவர்கள் கூட அந்த பகுதியை பயன்படுத்தாத அளவிற்கு மோசமாக காணப்படும் பனகல் சாலை சாக்கடை பகுதியில் வசித்து வரும் உள்நோயாளிகளின் உறவினர்களை பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்க மாவட்ட நிர்வாகம் முன்வரவேண்டும்.