திருச்சியில் பரபரப்பு கலெக்டர் அனுமதிக்காக செக்போஸ்ட்டில் கணவர் உடலுடன் ஆம்புலன்சில் 8 மணி நேரம் காத்திருந்த மனைவி: கோவில்பட்டி அருகே பரிதாபம்

கோவில்பட்டி கலெக்டர் கோவில்பட்டி: திருச்சியில் நெஞ்சுவலியால் இறந்த லாரி டிரைவர் உடலுடன் வந்த ஆம்புலன்சை முறையான ஆவணங்கள் இல்லையென கூறி கோவில்பட்டி சோதனை சாவடியில் அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.


கலெக்டர் அனுமதிக்காக 8 மணி நேரம் கணவர் உடலுடன் மனைவி காத்திருந்தது பரிதாபத்தை ஏற்படுத்தியது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கழுகுமலை லெட்சுமிபுரத்தை சேர்ந்தவர் காளிராஜ். லாரி டிரைவரான இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு லாரியில் ஆந்திராவிற்கு சென்றுவிட்டு ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார். திருச்சி அருகே வந்த போது, காளிராஜிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


அங்கு நேற்று முன்தினம் இறந்தார். இதையெடுத்து அவரது உடலை ஆம்புலன்சில் அவரது மனைவி, உறவினர் ஒருவர் உதவியுடன் சொந்த ஊருக்கு கொண்டு வந்தார். கோவில்பட்டி அருகே தோட்டிலோவன்பட்டி சோதனை சாவடியில், இரவு 10 மணியளவில் ஆம்புலன்சை தடுத்து நிறுத்திய அதிகாரிகள், கலெக்டர் அனுமதியின்றி ஆம்புலன்சை அனுமதிக்க முடியாது என்று தெரிவித்துள்ளனர்.


இதனால் அதிர்ச்சியடைந்த காளிராஜின் மனைவி கதறி அழுதார். தகவலறிந்து நேற்று காலை 6 மணியளவில் கோவில்பட்டி தாசில்தார் மணிகண்டன் சென்று விசாரணை நடத்தினார். பின்னர் லாரி டிரைவர் அனுமதிக்கப்பட்ட தனியார் மருத்துவமனையில் விசாரித்த போது, காளிராஜ் நெஞ்சுவலியால் இறந்தது தெரியவந்தது. இதையடுத்து தாசில்தார் அனுமதியளித்ததின் பேரில், 8 மணி நேரத்துக்கு பின் காளிராஜ் உடலை அவரது சொந்த ஊருக்கு மனைவி மற்றும் உறவினர் கொண்டு சென்றனர்