சாலையில் சிதறிக்கிடந்த 8 தோட்டாக்கள்! -மதுரைக்கு அதிர்ச்சி கொடுத்த அடுத்த சம்பவம்

மதுரை விமான நிலையத்தில் ஆந்திராவைச் சேர்ந்த பெண் பயணி ஒருவரிடம் துப்பாக்கி தோட்டாக்கள் சமீபத்தில் பிடிபட்ட நிலையில், சாலையில் 8 தோட்டாக்கள் கிடந்த சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மதுரை ஜெய்ஹிந்துபுரம் நேதாஜி சாலையில் 8 தோட்டாக்கள் கிடப்பதாக மாநகரக் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று தகவல் வந்துள்ளது. இதையடுத்து உடனே அப்பகுதிக்கு வந்த காவல்துறையினர் அந்தத் தோட்டாக்களைப் பறிமுதல் செய்து மோப்ப நாய் மற்றும் தடயவியல் நிபுணர்கள் உதவியுடன் தடயங்களைச் சேகரித்தனர்,


அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது இரண்டு நபர்கள் பழைய பொருள்களை கொட்டிச் சென்றது தெரியவந்தது. அதில்தான் இந்தத் தோட்டாக்கள் இருந்துள்ளதையும் போலீஸார் உறுதிசெய்தனர். குப்பை கொட்டிய நபர்களை அடையாளம் கண்டுபிடித்து விசாரணை செய்தபோது, அந்தத் தோட்டாக்கள் ஜீவா நகரைச் சேர்ந்த விஜய் என்பவருக்குச் சொந்தமானது என்று கூறியுள்ளனர்.


அதைத் தொடர்ந்து விஜய்யைப் பிடித்து விசாரணை செய்துள்ளனர். அவர் போலீஸ் விசாரணையில், 7 வருடங்களுக்கு முன்பு தன் தந்தை காவல்துறை அனுமதியுடன் துப்பாக்கி வைத்திருந்ததாகவும் அவர் இறந்தபிறகு துப்பாக்கியைக் காவல்நிலையத்தில் ஒப்படைத்த நிலையில் தோட்டாக்களை ஒப்படைக்காமல் வீட்டில் மறைத்து வைத்திருந்ததாகவும், குடும்பப் பிரச்னையில் உறவினர்கள் சிலர் வீட்டில் இருந்த பொருள்களை எடுத்துச் சென்றுள்ளனர் எனக் கூறியிருக்கிறார்.


அதைக் குப்பையில் வீசியபோது தோட்டாக்கள் சிதறி சாலையில் விழுந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து, சட்டவிரோதமாக தோட்டாக்களைப் பதுக்கி வைத்திருந்த குற்றத்தில் விஜய் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்தச் சம்பவத்தில் வேறு ஏதேனும் பின்னணி உள்ளதா என்ற கோணத்திலும் போலீஸார் விசாரணை நடத்திவருகிறார்கள்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்

நெல்லை : எஸ்.ஐ மார்க்கெட் தெரசா தாக்கப்பட்டாரா ........ அறுக்கப்பட்டாரா