சென்னை தலைமை செயலகத்தில் தலைமைச் செயலகத்தில் வேகமாக பரவும் தொற்று: ஐ.ஏ.எஸ்., அதிகாரி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு உறுதி

தமிழகத்தில் மற்ற மாவட்டங்களில் நோய் பரவல் கட்டுக்குள் இருப்பதாக அரசு தெரிவித்து வரும் நிலையில், சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு உச்சத்தை தொட்டு வருகிறது.


இந்த சூழலில் மே 18 முதல் அரசு அலுவலகங்கள் அனைத்தும் 50 சதவிகித பணியாளர்களுடன் இயங்க அரசு உத்தரவிட்டது.


கடந்த இரண்டு வாரங்களாக 50% அடிப்படையில் சுமார் 3000 பணியாளர்களுடன் சென்னை தலைமை செயலகம் இயங்கி வருகிறது. இங்கு பணியாளர்கள் தவிர்த்து முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள், அதிகாரிகள், காவலர்கள், பத்திரிக்கையாளர்களும் நாள்தோறும் வந்து கொண்டிருக்கின்றனர்.


இந்நிலையில், சில நாட்களுக்கு முன்னர் பொதுக்கணக்கு குழு பிரிவில் உள்ள ஒரு பணியாளர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.


அதனை தொடர்ந்து, கடந்த மே 28-ஆம் தேதி வரை பல்வேறு துறைகளை சார்ந்த 8 நபர்களுக்கு உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகின.


தற்போது, ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஒருவர் உட்பட இருபதுக்கும் மேற்பட்ட நபர்களுக்கு தொற்று உறுதியாகி உள்ளதாக தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


தொழில் துறை ஆணையராக உள்ள ஐ.ஏ.எஸ்., அதிகாரி, முதலமைச்சரின் செயலாளர் பிரிவில் இரண்டு ஊழியர்கள், செய்தித்துறை இயக்குனர் உதவியாளர், பொதுப்பணித்துறை, நிதித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த 30 க்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு தொற்று உறுதியாகி உள்ளது.


மேலும் இது ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக முதலமைச்சர் கூட கடந்த இரண்டு நாட்களாக தலைமை செயலகம் வருவதை தவிர்த்து வீட்டில் இருந்தே அலுவல்களை கவனித்து வருவதாக கூறப்படுகிறது.


அமைச்சர்களும் இதை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டு உள்ளதாக தெரிகிறது. நோய் பரவல் தீவிரமாகி வரும் காரணத்தால், 50% பணியாளர்களை தவிர்த்து 33% சதவிகித பணியாளர்களை மட்டும் பணிக்கு வர அனுமதிக்க வேண்டும்.


பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் அரசு மேலும் கவனம் செலுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை ஊழியர்கள் சார்பில் வைக்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது