இ-பாஸுக்கு ரூ.2,500; சிக்கிய இளைஞர்கள்!' - திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் அதிர்ச்சி

கொரோனா தொற்று காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகளுடன் அமல்படுத்தப்பட்டுள்ளது. மண்டலம் வாரியாக பிரிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு மண்டலத்திலிருந்து இன்னொரு மண்டலத்துக்குச் செல்ல இ - பாஸ் பெற வேண்டும். ஆன் - லைன் மூலம் இ - பாஸ்களைப் பெறும் வசதியுள்ளது. மருத்துவம், திருமணம், இறப்பு ஆகிய காரணங்களுக்கு உடனுக்குடன் இ-பாஸ் வழங்கப்பட்டுவருகிறது.


ஆனால், பல தடவை விண்ணப்பித்தும் இ - பாஸ் கிடைப்பதில்லை என்ற குற்றசாட்டுக்களை பொதுமக்கள் முன்வைத்துவருகின்றனர். இந்த நிலையில் இ - பாஸ்கள் திருவள்ளூர் மாவட்டத்தில் விற்கப்படுவதாக திருவள்ளூர் காவல் நிலையத்தில் ஈக்காடு பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பவர் புகாரளித்தார். அவர் அளித்த புகாரில், `நான், டிரைவராக பணியாற்றி வருகிறேன்.


திருப்பதி செல்ல இ-பாஸ் கேட்டு விண்ணப்பித்தேன். ஆனால், எனக்கு அனுமதி கிடைக்கவில்லை. அப்போதுதான் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தற்காலிக ஊழியர்களாக பணியாற்றும் ஜெகதீஷ், தினேஷ் ஆகியோர் இ- பாஸ்களை பெற்றுக்கொடுக்கும் தகவல் கிடைத்தது. உடனடியாக அவர்களைச் சந்தித்து திருப்பதி செல்ல இ- பாஸ் வேண்டும் என கேட்டேன்.


அதற்கு அவர்கள் 2,500 ரூபாய் கேட்டனர். உடனே அந்தப் பணத்தை அவர்களிடம் கொடுத்தேன் ஆனால், இ-பாஸுக்கு மேலும் 2,500 ரூபாய் வேண்டும் என தினேஷ், ஜெகதீஷ் ஆகியோர் போனில் கேட்டனர். எனவே சம்பந்தப்பட்ட இருவர் மீதும் நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்' என்று குறிப்பிட்டிருந்தார். புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் வழக்கு பதிந்து, கலெக்டர் அலுவலகத்துக்குச் சென்றார்.


அங்கு, ஜெகதீஷ், தினேஷ் ஆகியோர் பணம் வாங்கிக் கொண்டு இ- பாஸ் வழங்கியது விசாரணையில் தெரியவந்தது. அதனால் அவர்கள் இருவரையும் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தினேஷ், ஜெகதீஷ் ஆகியோர் சென்னை பட்டரைவாக்கத்தில் ஸ்டூடியோ நடத்திவருவதோடு கலெக்டர் அலுவலகத்தில் தற்காலிக ஊழியர்களாக பணியாற்றிவருகின்றனர்.


பணம் கொடுத்து இ - பாஸ் பெற பொதுமக்கள் முயல வேண்டாம் என கலெக்டர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கைதான ஜெகதீஷ், தினேஷ் யாருக்கெல்லாம் பணம் வாங்கிக் கொண்டு இ-பாஸ் கொடுத்தார்கள் என்றும் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.


இதுகுறித்து கலெக்டர் அலுவலக அதிகாரி ஒருவரிடம் கேட்டதற்கு, ``திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் தற்காலிக ஊழியர்களாகப் பணியாற்றி வந்த ஜெகதீஷ், தினேஷ் ஆகிய இருவர் மீது இ-பாஸுக்கு பணம் வாங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் இணைய தளம் வழியாக இ-பாஸ் பெற்று அதை விற்றுவந்துள்ளனர். இந்த மோசடியில் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்று விசாரணை நடந்துவருகிறது.


மேலும் பொதுமக்கள், சரியான காரணத்தைக் குறிப்பிட்டு இ - பாஸுக்கு விண்ணப்பித்தால் அவர்களுக்கு இ-பாஸ் வழங்கப்பட்டு வருகிறது. எனவே, இடைத்தரகர்கள் மூலம் இ - பாஸ் பெற யாரும் முயல வேண்டாம்" என்றார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்