கணவன் முதுகைத் துளைத்த 14 குண்டுகள்! -தவறான நட்பால் கொலைக்கு ஸ்கெட்ச் போட்ட மனைவி

திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளியை அடுத்த போத்தன்குட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் (53), டெய்லர். இவருக்கு காஞ்சனா (40) என்ற மனைவியும், நான்கு பெண் பிள்ளைகளும் உள்ளனர். இந்த நிலையில், ஜெயந்திபுரம் என்ற இடத்தில் கடந்த 4-ம் தேதி, கோவிந்தராஜ் படுகாயங்களுடன் மயங்கிக் கிடந்தார். நாட்றம்பள்ளி போலீஸார் அவரை மீட்டுத் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


பின்னர், மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். கடந்த 15-ம் தேதி, சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்தார். பிரேதப் பரிசோதனையில், துப்பாக்கியால் சுடப்பட்டதில் கோவிந்தராஜ் இறந்திருப்பது தெரியவந்தது. முதுகுப் பகுதியிலிருந்து 14 நாட்டுத் துப்பாக்கிக் குண்டுகளை அகற்றிய மருத்துவர்கள், கோவிந்தராஜ் கொலை செய்யப்பட்டுள்ளதாக நாட்றம்பள்ளி போலீஸாரிடம் பிரேத அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளனர்.


இதையடுத்து, கொலை வழக்காகப் பதிவு செய்த போலீஸார் சந்தேகத்தின் பேரில், கோவிந்தராஜ் மனைவி காஞ்சனாவின் செல்போன் அழைப்புகளை ஆய்வு செய்தனர். சின்ன மூக்கனூரைச் சேர்ந்த கட்டட மேஸ்திரி குப்புசாமி (33) என்பவருடன் தினந்தோறும் அதிகநேரம் பேசுவது தெரியவந்தது. இதையடுத்து, காஞ்சனாவையும் அவரின் நண்பர் குப்புசாமியையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்தனர். முதலில் வாய் திறக்காத இரண்டு பேரும் பல்வேறு கதைகளைக் கூறி நாடகமாடினர். அவர்களின் பேச்சில் தடுமாற்றம் இருந்ததால், குப்புசாமியிடம் வேறு பாணியில் விசாரணை நடத்தினர்.


அதன் பின்னரே அதிர்ச்சிகரமான தகவல் வெளியானது. கோவிந்தராஜை திட்டம் போட்டு சுட்டுக் கொன்றதை குப்புசாமி ஒப்புக்கொண்டார். போலீஸாரிடம் குப்புசாமி கொடுத்த வாக்குமூலத்தில், ``கொலை செய்யப்பட்ட கோவிந்தராஜ் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு புதியதாக வீடு கட்டினார். நான் அவரது வீடு கட்டும் பணியைச் செய்தேன். அப்போது, கோவிந்தராஜின் மனைவி காஞ்சனாவுடன் நட்பு ஏற்பட்டது. இரண்டு பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்தோம். இதையறிந்த கோவிந்தராஜ் மனைவியைக் கண்டித்தார். நாங்கள் தனிமையில் சந்திப்பதற்கு அவர் தடையாகவும் இடையூறாகவும் இருந்தார். இதையடுத்தே அவரை தீர்த்துக் கட்ட முடிவுசெய்தோம்.


காஞ்சனாவின் தூண்டுதலால்தான் அவரின் கணவரை சுட்டுக் கொன்றேன். இந்தக் கொலைக்கு உடந்தையாக என்னுடைய நண்பனான சின்னமூக்கனூரைச் சேர்ந்த வீரா என்கிற வீராசாமி இருந்தான். நாட்டுத் துப்பாக்கியை பாச்சல் கிராமத்தைச் சேர்ந்த முத்தையா என்பவரிடம் வாங்கினோம். கோவிந்தராஜை கொன்றுவிட்டால் எங்களின் சந்தோஷத்துக்கு எந்தவிதமான இடையூறும் இருக்காது என்று நினைத்துத்தான் இவ்வளவு பெரிய காரியத்தைச் செய்தோம்’’ என்று குப்புசாமி கூறியதாக காவல் துறையினர் தெரிவிக்கிறார்கள்.


இதையடுத்து, கோவிந்தராஜின் மனைவி காஞ்சனா மற்றும் காதலன் குப்புசாமியை கைதுசெய்த போலீஸார், நாட்டுத் துப்பாக்கியை கொடுத்த முத்தையாவையும் கைது செய்தனர். மேலும், கொலைக்கு உடந்தையாக இருந்து தலைமறைவான குப்புசாமியின் நண்பர் வீராசாமியையும் போலீஸார் தீவிரமாக தேடி வருகிறார்கள். கணவனைக் கொல்ல மனைவியே இவ்வளவு கச்சிதமாக திட்டம் வகுத்து கொடுத்த சம்பவம், திருப்பத்தூர் மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.


Popular posts from this blog

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

“பொதுமக்களிடம் காவலர்கள் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும்” -தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு