திருப்பம்.. முதல்வருடன் செங்கோட்டையன் திடீர் சந்திப்பு.. 10ம் வகுப்பு பொதுத் தேர்வு தள்ளிப்போகிறதா...

சென்னை: 10ம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளிவைக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்து வரக்கூடிய நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை, பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சந்தித்து ஆலோசனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கடந்த மார்ச் மாதம் 10ஆம் வகுப்பு பொது தேர்வு நடைபெறுவதாக இருந்தது. கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக அந்த தேர்வு தேதி குறிப்பிடப்படாமல் தள்ளி வைக்கப்பட்டது. இந்த நிலையில், ஜூன் 1ம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருந்தார்.


ஆனால், அப்போது ஊரடங்கு நீட்டிப்பு பற்றி அறிவிப்பு வெளியாகாத காலகட்டம் என்பதால் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இடையே குழப்பம் நிலவியது. எனவே, ஜூன் 15ஆம் தேதி, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு துவங்கும் என்று பிறகு அறிவிப்பு மாற்றப்பட்டது. ஹால் டிக்கெட் கொடுக்கும் பணிகள் துவங்கி விட்டது. இந்த நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளிவைக்க வேண்டும், மாணவர்கள் உயிருடன் விளையாட வேண்டாம் என்று காட்டமாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.


தேர்வை இப்போது நடத்தக்கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பள்ளிகள் திறப்பது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை மாநில அரசே மீறலாமா, பத்தாம் வகுப்பு தேர்வை நடத்து வதற்கு என்ன அவசரம் என்று சரமாரியாக கேள்விகளை எழுப்பியது நீதிமன்றம். மற்றொரு பக்கம் பெற்றோர் ஆசிரியர் சங்கத்திலும் தேர்வு தள்ளி வைக்க கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.


அதிலும், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் வைரஸ் பாதிப்பு என்பது தீ போல பரவி வரக் கூடிய இந்த சூழ்நிலையில் பதட்டமின்றி எப்படி பள்ளிகளுக்கு குழந்தைகளை அனுப்ப முடியும் என்று பெற்றோர் குமுறி வருகின்றனர். இந்த நிலையில்தான், இன்று, நண்பகல் 12 மணியளவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை, பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.


எதிர்ப்புகளை தொடர்ந்து தேர்வை ஒத்தி வைக்கலாமா, அல்லது எந்த மாதிரி பாதுகாப்பு நடவடிக்கை எடுத்து தேர்வை நடத்தலாம் என்பதெல்லாம் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆலோசனையில் எந்த மாதிரி முடிவு எடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே எழுந்துள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு