தமிழகத்தில் 10 மாவட்டங்களில் நாளை முதல் கோர்ட் திறக்க அனுமதி: சென்னை ஐகோர்ட் பதிவாளர் அறிவிப்

தமிழகத்தில் 10 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் கீழமை நீதிமன்றங்களை திறக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. கொரோனா தொற்று பரவாமல் தடுப்பதற்காக தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் மார்ச் 26ம் தேதிமுதல் உயர் நீதிமன்றம் உள்ளிட்ட அனைத்து நீதிமன்றங்களும் மூடப்பட்டன.


முக்கிய வழக்குகள் மட்டும் வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரிக்கப்பட்டு வந்தது. உயர் நீதிமன்றத்தில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் மட்டுமே வழக்குகள் விசாரிக்கப்படுகிறது. இந்நிலையில், ஜூன் மாதம் முதல் வாரம் முதல் அரியலூர், பெரம்பலூர், ஈரோடு, புதுக்கோட்டை, கடலூர், நாமக்கல், திண்டுக்கல், விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய 9 மாவட்டங்களில், மாவட்ட தலைநகர் மற்றும் தாலுகா அளவில் உள்ள நீதிமன்றங்கள் வழக்கமான முறையில் முதல் செயல்படலாம் என்று உயர் நீதிமன்றம் அறிவித்தது.


இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி தலைமையிலான நிர்வாக குழு மாவட்ட முதன்மை நீதிபதிகளுடன் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தியது. அதன் முடிவின் அடிப்படையில் உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் குமரப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் கோவை, மதுரை, தஞ்சாவூர், சேலம், தூத்துக்குடி, திருச்சி, திருநெல்வேலி, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் ஆகிய 10 மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் உள்ள நீதிமன்றங்களை ஜூன் 22 முதல் (நாளை) திறக்க அனுமதி வழங்கப்படுகிறது.


இந்த நீதிமன்றங்களில் 50 சதவீத ஊழியர்களுக்கு மிகாமல் பணி ஒதுக்க வேண்டும். நோய் தொற்று வராமலிருக்க உரிய பாதுகாப்பு நடைமுறைகள் கண்டிப்பாக கடைபிடிக்கப்பட வேண்டும். வழக்காடிகள் நீதிமன்றத்திற்கு வர அனுமதியில்லை. வக்கீல்களோ, அவரது கிளார்க்குகளோ நீதிமன்றத்தில் வழக்கு ஆவணங்களை ஊழியர்கள் கையில் தராமல் பெட்டிகளில் போடும் நடைமுறையை கடைபிடிக்க வேண்டும்.நீதிமன்றத்திற்கு வர விரும்பாத வக்கீல்கள் காணொலி மூலம் வழக்கில் ஆஜராகவும் அனுமதி அளிக்கப்படுகிறது.


அதேநேரம், அரக்கோணம் (வேலூர்), ஸ்ரீரங்கம் (திருச்சி), வள்ளியூர் (நெல்லை), ஆலங்குளம் (நெல்லை), மேலூர் (மதுரை) ஆகிய தாலுக்காக்களில் உள்ள நீதிமன்றங்களை திறக்க அனுமதி வழங்கபடவில்லை. தற்போதுள்ள வீடியோ கான்பரன்ஸ் விசாரணை நடைமுறையே தொடர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு