கேரளாவில் அன்லாக் 1-ல் கட்டுப்பாடுகள் எவற்றிற்கு...தளர்வுகள் என்னென்ன..- முதல்வர் பினராயி விஜயன்

கரோனா ஊரடங்கு இந்த முறை பல்வேறு தளர்வுகளுடன் வந்துள்ள நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அன்லாக் 1 விதிகளை ஒட்டி கேரளாவில் கட்டுப்பாடுகள் எவற்றிற்கு? தளர்வுகள் என்னென்ன என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் விவரித்தார்.


கேரளாவில் கரோனாவால் 55 வயது பெண் ஒருவர் பலியானதாகவும் மாநிலத்தில் புதிதாக 57 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார். அன்லாக் 1 தொடர்பாக திருவனந்தபுரத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பினரயி விஜயன், "கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த 55 வயது பெண் ஒருவர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இறந்தார்.


அவர் வளைகுடா நாட்டிலிருந்து திரும்பியவர். கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவருக்கு ஏற்கெனவே இருதய நோயும் இருந்தது.


சில தினங்களுக்கு முன்னதாக வயநாட்டைச் சேர்ந்த பெண் ஒருவரும் கரோனாவுக்கு பலியானார். ஆனால் அவருக்கு புற்றுநோயும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய தினம் புதிதாக 57 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


இதனால் மாநிலத்தில் நோய்த் தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை 708 என்றளவில் உள்ளது. மீண்டும் கரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிப்பதால் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் பெருங்கூட்டம் கூட அனுமதிக்க இயலாது.


ஆகையால் 50 பேர் மட்டுமா கலந்து கொள்ளலாம். கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் பூரண ஊரடங்கு நிலவும். பிற மாநிலங்களில் இருந்து வருவோர்க்கும் இபாஸ் போன்ற நடைமுறைகள் தொடரும். அதேவேளையில் மாநிலத்துக்குள் கட்டுப்பாடுகளுடன் போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்படுகிறது.


பேருந்தில் பயணம் செய்யும் பயணிகள் மாஸ்க் அணிவது கட்டாயம். பயணிகளுக்கு கிருமி நாசினி பேருந்துகளில் வழங்கப்படும். தனியார் டாக்ஸி, கார்களில் ஓட்டுநருடன் இருவர் பயணிக்கலாம். ஆட்டோக்களுக்கும் இது பொருந்தும்.


திரைப்பட படப்பிடிப்புகளைப் பொருத்துவரை உள்ளரங்கிகளில், வெளியிடங்களில் 50 பேருக்கு மிகாமல் பணியில் ஈடுபடலாம். சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு 25 பேர் அனுமதிக்கப்படுகின்றனர்" என்றார்.