தப்லிகி ஹீரோக்கள் என டுவீட் : ஐ.ஏ.எஸ். முஹமது மோசின், 'அதிகாரிக்கு நோட்டீஸ்...

பெங்களூரு: ;தப்லிகி ஜமாத் மாநாட்டில் பங்கேற்றவர்களை, 'ஹீரோக்கள்' என 'டுவீட்' செய்த, ஐ.ஏ.எஸ்., அதிகாரிக்கு, கர்நாடக அரசு, 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது.


டில்லியின் நிஜாமுதின் பகுதியில் நடந்த தப்லிகி ஜமாத் மாநாட்டில் பங்கேற்றவர்களால், நாடு முழுதும், பலர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து, வைரசில் இருந்து குணமடைந்தவர்கள், கொரோனா சிகிச்சைக்காக, தங்கள் பிளாஸ்மாவை நன்கொடையாக வழங்கி வருகின்றனர்.


இந்நிலையில், இது குறித்து, கர்நாடக, ஐ.ஏ.எஸ்., அதிகாரி முஹமது மோசின், 'டுவிட்டரில்' வெளியிட்ட ஒரு பதிவில், '300க்கும் மேற்பட்ட தப்லிகி ஹீரோக்கள், நாட்டிற்கு சேவை செய்ய, பிளாஸ்மாவை நன்கொடையாக வழங்குகின்றனர். 'ஆனால், இந்த ஹீரோக்கள் செய்யும், இதுபோன்ற மனிதாபிமான பணிகளை, ஊடகங்கள் வெளியே காட்டுவதில்லை' என பதிவிட்டிருந்தார்.


இதையடுத்து, கர்நாடக அரசு, அவருக்கு நோட்டீஸ் அனுப்பி 'அடுத்த ஐந்து நாட்களுக்குள், இதுகுறித்து பதிலளிக்க வேண்டும். தவறினால், உங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.