சொகுசு கார் முதல் ரியல் எஸ்டேட் வரை - ஓபிஆர் நிறுவனத்தால் சர்ச்சையில் சிக்கிய ஓபிஎஸ்

தேசிய அளவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பின்னர், கடந்த மார்ச் 30ஆம் தேதி சென்னை கோயம்பேட்டில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆய்வு மேற்கொண்டார்.


அப்போது அவர் பயன்படுத்திய வாகனம் TN 05 CE 2345 என்ற பதிவெண் கொண்ட ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் கார் ஆகும்.


இது விஜயந்த் டெவலப்பர்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன்கள் ஓ.பி.ரவீந்திரநாத் குமார், வி.பி.ஜெயபிரதீப் மற்றும் மகள் கவிதா பானு ஆகியோர் இயக்குநர்களாக இருக்கின்றனர்.


கடந்த 2017ஆம் ஆண்டு துணை முதலமைச்சராக பதவியேற்ற பின் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ரூ.19.46 லட்சம் மதிப்பிலான இன்னோவா கிரிஸ்டா கார் அரசுப் பணிகளுக்காக வழங்கப்பட்டது.      


அப்படியிருக்கையில் ஓபிஎஸ் எதற்காக தனியார் நிறுவனத்தின் காரைப் பயன்படுத்த வேண்டும் என்று கேள்வி எழுகிறது.


மேலும் இந்த காருக்கு சொந்தமான தனியார் நிறுவனத்திற்கு ஓ.பன்னீர்செல்வத்தின் கீழ் இயங்கும் அரசின் துறை ரியல் எஸ்டேட் பணிகளுக்காக அனுமதி அளித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


இவற்றிற்கு இடையில் ஏதேனும் தொடர்பிருக்குமா என்றும் கேள்வி எழுகிறது.


விஜயந்த் டெவலப்பர்ஸ் நிறுவனம் கடந்த நவம்பர் 21, 2008ல் தொடங்கப்பட்டுள்ளது. இது திருப்பூரை மையமாகக் கொண்டு செயல்படும் கட்டுமான மற்றும் ரியல் எஸ்டேட் நிறுவனம் ஆகும்.    


இந்நிறுவனம் கடந்த ஜனவரி 20, 2020ல் TNRERA எனப்படும் தமிழ்நாடு கட்டிட மனை விற்பனை ஒழுங்குமுறை குழுமத்திடம் இருந்து 9.02 ஏக்கரில் ரியல் எஸ்டேட் திட்டத்திற்காக அனுமதி பெற்றுள்ளது.


இதுதொடர்பான விண்ணப்பத்தில் சிட்டி யூனியன் வங்கி, மந்தவெளி கிளையில் வங்கி கணக்கு தொடங்கப்பட்டுள்ளது.


இதில் பிளாட் ஒதுக்கீடு செய்யப்படும் ஒவ்வொருவரிடம் இருந்து பெறப்படும் தொகையில் 70 சதவீதத்தை வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்ய ஒப்புக் கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் ரூ.500 கோடி மதிப்பிலானது என்று கூறப்படுகிறது.  


 இதில் 76 ரெகுலர் பிளாட்கள், 41 பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினருக்கான பிளாட்கள் என பிரிக்கப்பட்டுள்ளன.


இவை திருப்பூர் அடுத்த திருமுருகன்பூண்டி அடுத்த ராக்கியாபாளையத்தில் அமைந்துள்ளன. TNRERA என்ற அமைப்பு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பொறுப்பு வகிக்கும் தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறையின் கீழ் இயங்கி வருகிறது.


தமிழ்நாடு கட்டிட மனை விற்பனை ஒழுங்குமுறை குழுமத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் மீது புகார்கள் வந்தால் அதன்மீது விசாரணை நடத்த ஓ.பன்னீர்செல்வத்திற்கு முழு அதிகாரம் உள்ளது. இவரால் தாமாக வந்து விசாரிக்கக் கூட முடியும்.


இப்படியொரு சூழலில் தந்தை அமைச்சராக இருக்கும் துறையின் கீழ் உள்ள குழுமத்தில் மகன்கள் இயக்குநர்களாக உள்ள நிறுவனம் கட்டுமான தொழிலுக்காக விண்ணப்பித்து அனுமதி பெற்றுள்ளது.      


இது ஆட்சி, அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யும் முயற்சி என்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.


கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலின் போது ஓ.பி.ரவீந்திரநாத் குமார் தாக்கல் செய்த வேட்புமனுவில் ரூ.33,340 ஈக்விட்டி ஷேர்ஸ் மதிப்பிலான விஜயந்த் டெவலப்பர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தை மட்டுமே குறிப்பிட்டிருந்தார்.


இந்நிறுவனம் ரூ.36.52 லட்சம் கடனில் இருப்பதாகவும் கூறியிருந்தார். மேலும் தனது சகோதரர் ஜெயபிரதீப்பிற்கு ரூ.33 லட்சமும், சகோதரி கவீதாவிற்கு ரூ.83 லட்சமும், குளோபல் ஹோம் ரியாலிட்டிக்கு ரூ.4.92 லட்சமும், ஜெயம் விஜயம் எண்டர்பிரைசஸிற்கு ரூ.43.26 லட்சமும், மந்தைவெளி சிட்டி யூனியன் கிளைக்கு ரூ.1.41 கோடியும், ஹெச்.டி.எப்.சி வங்கிக்கு கார் கடன் ரூ.21.63 லட்சமும் திருப்பித் தர வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.


    TNRERAக்கு ஒப்படைத்த ஆவணங்களில் இடம்பெற்றிருந்த ஓபிஆரின் முகவரி மற்றொரு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


அதாவது ஓபிஆரின் சகோதரி மற்றும் சகோதரர் ஆகியோர் வெவ்வேறு முகவரிகளை அளித்துள்ளனர்.


ஆனால் ஓபிஆர் அளித்துள்ள முகவரி சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் அதிகாரப்பூர்வ முகவரி என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த முகவரியில் விஜயந்த் டெவலப்பர்ஸ் நிறுவன இயக்குநர்கள் யாரும் இல்லை. ஆனால் தனது வேட்புமனுவில் கடந்த 10 ஆண்டுகளாக எந்தவொரு அரசு குடியிருப்பிலும் தங்கவில்லை என்று ஓபிஎஸ் குறிப்பிட்டுள்ளார். இது அடுத்தடுத்து சர்ச்சைகளுக்கு வித்திட்டுள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு