ஆதரவின்றி சுற்றித்திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டு குடும்பத்தாரிடம் ஒப்படைத்த இன்ஸ்பெக்டர்; குளித்தலையில் மனதை நெகிழ செய்த சம்பவம்

குளித்தலையில் ஆதரவின்றி சுற்றித்திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டு குடும்பத்தாரிடம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஒப்படைத்த சம்பவம் அப்பகுதியினரிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கரூர் மாவட்டம் குளித்தலை பேருந்து நிலையப் பகுதியில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க சற்று மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஆதரவின்றி சுற்றித்திரிந்து வந்தார்.


போலீஸார் மற்றும் தன்னார்வலர்கள் கொடுக்கும் உணவு, அம்மா உணவகத்தில் வழங்கப்படும் இலவச உணவு ஆகியவற்றை வாங்கி சாப்பிட்டு கொண்டும், சிலர் வழங்கும் பணத்தின் மூலம் உணவகங்களில் உணவு பார்சல் வாங்கி சாப்பிட்டும் அப்பகுதியில் உள்ள கடைகளில் படுத்துத் தூங்கி வந்தார். எந்த ஊர் என கேட்பவர்களிடம் தான் திண்டுக்கல் என கூறிவந்தார்.


குளித்தலை நகர போலீஸார் சார்பில் அப்பகுதியில் உள்ள ஆதரவற்றவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டு வந்தது. அப்பெண்ணுக்கும் போலீஸார் தொடர்ந்து ஒரு மாதத்திற்கு மேல் மதிய நேரத்தில் உணவு வழங்கி வந்துள்ளனர். கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை போலீஸார் இல்லாததால் உணவு வழங்கப்படவில்லை.


அப்போது அப்பெண் போலீஸாரிடம் சென்று நாள்தோறும் உணவு வழங்கிய வந்த நிலையில் அன்றைய தினம் தனக்கு உணவு வழங்கவில்லை என தெரிவித்துள்ளார்.


இதையடுத்து குளித்தலை போக்குவரத்து ஆய்வாளர் எம்.கார்த்திகேயன், அப்பெண்ணிடம் விசாரித்தபோது அவர் பெயர் அம்சவள்ளி என்றும், திருச்சி மாவட்டம் தொட்டியத்தை அடுத்த வரதராஜபுரம் நடுத்தெருவை சேர்ந்தவர் என்றும், கணவர் பெயர் லோகநாதன், கறிக்கடை வைத்துள்ளார், 2 மகன்கள் உள்ளனர் எனவும் தெரிவித்தார்.


இதையடுத்து கடந்த 2 நாட்களுக்கு முன் ஆய்வாளர் கார்த்திகேயன் அவரிடம் தான் திண்டுக்கல் செல்வதாகக்கூறி, பெண் காவலர் உதவியுடன் முகக்கவசம் அணிவித்து அவரது ஜீப்பில் பெண் காவலருடன் அம்சவள்ளியை அவரது சொந்த ஊருக்கு அழைத்துச் சென்று கணவர் லோகநாதன் மற்றும் குடும்பத்தினரிடம் ஊர் மக்கள் முன்னிலையில் ஒப்படைத்தார்.


அப்போது மனநலம் பாதிக்கப்பட்டவர்களை கைவிடக்கூடாது உரிய சிகிச்சை அளித்து பத்திரமாக பார்த்துக்கொள்ள அறிவுரை வழங்கி சிறிய அளவில் பண உதவி அளித்துத் திரும்பினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் இன்று வெளியானதை அடுத்து அவருக்கு ஏராளமாக பாராட்டுகள் குவிந்து வருகிறது.


இதுகுறித்து குளித்தலை போக்குவரத்து ஆய்வாளர் எம்.கார்த்திகேயன் கூறியபோது, "அப்பெண்ணிடம் விசாரித்தபோது குடும்பம் பற்றிய விபரங்களை கூறியதால் அவரது குடும்பத்தோடு சேர்த்து வைத்து அவரை பாதுகாப்பாக பார்த்துக்கொள்ள குடும்பத்தினருக்கு அறிவுறுத்தியதுடன் எக்காரணத்தைக் கொண்டும் வீட்டை விட்டு வெளியேறக்கூடாது என அப்பெண்ணுக்கு அறிவுறுத்தியுள்ளோம்" என்றார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு