திருமழிசை சந்தையில் விற்பனையாகாத காய்கறிகள்: கால்நடைகளுக்கு உணவாகும் கேரட், கத்தரி, வெண்டை

ஆசியாவின் மிகப் பெரிய காய்கறிச் சந்தைகளில் ஒன்றாக சென்னை கோயம்பேடு சந்தை விளங்குகிறது. கொரோனா பரவல் காரணமாக இந்த சந்தை மூடப்பட்டதால், பூந்தமல்லியை அடுத்த திருமழிசையில் தற்காலிக சந்தை அமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு கட்டுப்பாடுகளுடன் இயங்கும் சந்தையில், மொத்த வியாபாரிகள் காய்கறிகள் வாங்க அனுமதிக்கப்படுகின்றனர்.


தற்போது, காய்கறிகளின் வரத்து அதிகமாக இருந்தபோதிலும் அதற்கேற்ப விற்பனை இல்லை என்று வியாபாரிகள் கூறுகின்றனர். காய்கறிகளின் விலை குறைவாக உள்ள போதும், திருவிழா, திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் ரத்து மற்றும் உணவகங்கள் சொற்ப அளவில் கொள்முதல் செய்வது ஆகியவற்றால் வியாபாரம் மந்தமாகியுள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர்.


இதனால், காய்கறிகள் விற்பனையாகாமல் அழுகுவதால், டன் கணக்கில் குப்பையில் கொட்டப்பட்டு, கால்நடைகளுக்கு உணவாகின்றன. கோயம்பேடு சந்தை போன்று, திருமழிசையில் காய்கறிகளை சேமித்து வைத்து விற்பனை செய்யவும், வெயிலின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கவும் வசதி இல்லை என வியாபாரிகள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.


காய்கறி சீசன் நேரத்தில் வியாபாரிகளை நம்பித்தான் விவசாயிகள் உள்ளனர். ஆனால், கடும் கட்டுப்பாடுகள் காரணமாக சரக்கு வாகனங்களை நிறுத்தி வைத்து, காய்கறிகளை விற்பனை செய்ய முடியவில்லை என்று வியாபாரிகள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே மீண்டும் கோயம்பேடுக்கு, சந்தையை மாற்றினால்தான் தங்களால் மீள முடியும் என கூறுகின்றனர்.


கொரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள விவசாயிகள், கடும் இன்னல்களுக்கு இடையே காய்கறிகளை விளைவித்து சந்தைக்கு அனுப்புகின்றனர். ஆனால், திருமழிசை போன்ற சந்தைகளில் காய்கறிகள் விற்பனையாகாததால் உரிய விலை கிடைக்காமல் மேலும் சிக்களுக்கு ஆளாகியுள்ளனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

“பொதுமக்களிடம் காவலர்கள் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும்” -தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு

ஸ்ரீ பாலாஜி பவன் ஹோட்டல் ஒன்றில் வாங்கப்பட்ட சைவ உணவில் இறந்த எலியின் தலை அசைவமாக மாறிய அதிர்ச்சி சம்பவம்