லட்சக்கணக்கில் குவியும் விண்ணப்பம் கையில காசு இல்லீங்க.. ரேஷன் கார்டாவது தாங்க..

கடைசியில இப்படி நிக்க வச்சிட்டாங்களே? *


கொரோனா பாதிப்பால் கலங்கும் மக்கள் ஸ்கூல்ல படிக்கிற காலத்துல, ‘டேய், ரேஷன்ல ஜீனி, மண்ணெண்ணெய் வாங்கிட்டு வாடா’ என அப்பா விரட்டினால் அம்புட்டு ஆத்திரம் வரும். சில சமயம் அம்மா பரிந்து வருவார்.


‘படிக்கிற புள்ளைய ஏங்க கெடுக்கிறீங்க? நான் போய்ட்டு வரேன் ராசா’ என்று மண்ணெண்ணெய் கேனையும், பையையும் எடுத்துக்கொண்டு வேகாத வெயிலிலும் போய் நிற்பார் அம்மா. அம்மா சுட்டுத்தரும் இனிப்பையும், பலகாரத்தையும் ருசித்தவர்களுக்கு, அவரோட கஷ்டத்தை அந்த வயசுல புரிஞ்சுக்கறதே இல்ல. இப்படி இஷ்டத்துக்கு சுத்தினவங்கதான் இன்னிக்கு 40 - 50 வயசுல உட்கார்ந்து, ‘‘அடுத்த வேளை சோத்துக்கு என்ன பண்றது? காசு இல்ல...


வயித்த பிசையுதேன்னு மோட்டு வலைய பார்த்து வீட்டுல உட்கார்ந்திருக்காங்க. இப்பத்தான் அந்த ரேஷன் கடை அருமை தெரிஞ்சுருக்கு போல. ரேஷன் கார்டு வைச்சுருக்கறதே கவுரவ குறைவுன்னு நெனச்சிட்டு இருந்தவங்க, பரபரன்னு ரேஷன் கார்டுக்கு அப்ளை பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. எல்லாம் கொரோனா செய்த மாயம். இவ்வாறு விண்ணப்பம் செய்தவர்களில் யார் ஏழை என்றே தெரியவில்லையாம். ஏழைகள் என்ற அடையாளத்துடன் இருந்த, புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பலர் ஊரடங்கை தொடர்ந்து வெளியேறிவிட்டனர்.


இப்போது இருப்பவர்களை ஏழைகள் என்று எந்த வகையில் சொல்வது? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ‘‘நாடு முழுவதும் ஒரே ரேஷன் திட்டத்தை அமல்படுத்தி, ஏழைகள் அனைவருக்கும் ரேஷன் கார்டு கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும்’’ என, பொருளாதார நிபுணரும், டெல்லி ஐஐடி பேராசிரியருமான ரீத்திகா கேரா வலியுறுத்தியுள்ளார்.


மாநில அரசுகளிடம் உள்ள புள்ளி விவரங்களின்படி, ஊரக பகுதிகளில் 90 சதவீதத்துக்கு மேல் ஏழைகள் வசிக்கும் ஒடிசா, மேற்கு வங்கம், ராஜஸ்தான், பீகார், உத்தர பிரதேச மாநிலங்கள் ஏற்கெனவே உணவு பாதுகாப்பு சட்டத்தில் பலன் பெற்று வருகின்றன. ஆனால், ஒடிசாவில் புதிதாக 5 லட்சம் புதிய ரேஷன் கார்டுகளுக்கு விண்ணப்பம் குவிந்துள்ளது. ஏற்கெனவே இந்த மாநிலத்தில் 3.26 கோடி ரேஷன் கார்டுகள் உள்ளன. ‘‘புதிய விண்ணப்பத்தை பரிசீலித்து 10,000 கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. மற்றவை ஓரிரு மாதங்களில் பரிசீலித்து வழங்கப்படும்’’ என உணவு விநியோகம் மற்றும் நுகர்வோர் நலத்துறை கூடுதல் செயலாளர் ஹக்யூ கூறுகிறார்.


ராஜஸ்தான் அரசு ரேஷன் கார்டு இல்லாத 90 லட்சம் பேருக்கு ரேஷன் வழங்க முடிவு செய்துள்ளது. மேற்கு வங்க அரசு, ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்த 5 லட்சம் குடும்பத்தினருக்கு டோக்கன் வழங்கியுள்ளது. ஏற்கெனவே இந்த மாநிலத்தில் 5.65 கோடி பேர் ரேஷன் கார்டு வைத்துள்ளனர். உத்தர பிரதேச அரசு 3.23 லட்சம் புதிய கார்டுகளை வழங்கியுள்ளது. இங்கு ஏற்கெனவே 3.4 கோடி குடும்பங்களிடம் ரேஷன் கார்டு உள்ளன. ஜார்கண்டில் 6.97 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.


இவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளது. எனினும், ஊரடங்கு காலத்தில் அவர்களுக்கு 10 கிலோ ரேஷன் பொருட்களை, கிலோ 1 ரூபாய்க்கு வழங்க முடிவு செய்துள்ளதாக, உணவுத்துறை இயக்குநர் சஞ்சய் குமார் தெரிவித்துள்ளார். மத்திய பிரதேசத்தில் ரேஷன் கார்டு இல்லாத 32 லட்சம் பேருக்கு 5 கிலோ ரேஷன் பொருட்கள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.


ஆந்திராவில் 95,000 பேர் புதிய ரேஷன் கார்டு கோரி வி்ண்ணப்பித்துள்ளனர். இவர்களில் 81,000 பேருக்கு வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பஞ்சாபில் 3.2 லட்சம் கார்டுகளுக்கு விண்ணப்பம் குவிந்துள்ளது. இங்கு ஏற்கெனவே 1.41 கோடி பேர் ரேஷன் கார்டு வைத்துள்ளனர். ஹரியானாவில் 2.5 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். சில மாநிலங்கள் ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கு மானிய விலையில் உணவு வழங்க உதவுமாறு, மத்திய அரசிடம் கூடுதல் தானியங்கள் கோரியுள்ளனர்.


தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ், ஏழைகளுக்கு அத்தியாவசிய உணவு பொருட்கள் மானிய விலையில் ரேஷன் கடைகள் மூலம் விநியோகம் செய்யப்படுகின்றன. ஊரக பகுதிகளில் 75 சதவீதம் பேரும், நகர் பகுதிகளில் 50 சதவீதம் பேரும் இதனால் பயன்பெறுகின்றனர். வரும் 3ம் தேதி வரை நீ்ட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கு, மீண்டும் நீட்டிக்கப்படுமா என தெரியவில்லை.


நாட்டிலுள்ள சுமார் 300க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கொரோனா கொஞ்சம் உக்கிரம் காட்டி விட்டது. ‘சிவப்பு அபாயத்தை’ புரிந்து கொண்ட மத்திய, மாநில அரசுகள் இந்த மாவட்டங்களில் ஊரடங்கை மேலும் நீட்டிக்க காத்திருக்கின்றன. இந்த நேரத்தில் குவியும் ரேஷன் கார்டு விண்ணப்பம், மக்களின் பரிதாப நிலையை உணர்த்துகிறது என அரசு அதிகாரிகள் சிலர் தெரிவிக்கின்றனர்.


யாரிடம் இந்த கோபத்தைக் காட்டுவது...


சத்தியமா கொரோனாவிடம் தானே?


புதிய விண்ணப்பங்கள் ஒடிசா 5 லட்சம்


மேற்கு வங்கம் 5 லட்சம்


உத்தரபிரதேசம் 3.23 லட்சம்


ஜார்கண்ட் 6.67 லட்சம்


பஞ்சாப் 3.2 லட்சம்


அரியானா 2.5 லட்சம்


ஆந்திரா 95 ஆயிரம்


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு