ஊரடங்கு விதிகளை மீறினால் தனிமைப்படுத்தப்படுவீர்... சென்னை மாநகராட்சி கடும் எச்சரிக்கை

சென்னையில் சமூக விலகலைக் கடைப்பிடிக்காத கடைகள், நிறுவனங்கள், அலுவலகங்கள் மூடப்படும் என்றும், விதிகளை மீறுவோர் 14 நாட்கள் தனிமைக் கண்காணிப்பில் வைக்கப்படுவர்  என்றும் மாநகராட்சி ஆணையர் எச்சரித்துள்ளார்.


இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் வெளியிட்டுள்ள அறிவிக்கையில், கொரோனா பரவலைத் தடுக்கப் பொது இடங்களில் சமூக விலகலையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் கடுமையாகப் பின்பற்றச் செய்ய உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.


ஒவ்வொருவருக்கும் இடையே குறைந்தது ஒருமீட்டர் இடைவெளி இருக்க வேண்டும் என்றும், பணியிடங்களில் அனைவரும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.


விதிமுறைகளை மீறும் கடைகள், நிறுவனங்கள் அலுவலகங்கள் மூடப்படுவதுடன் அவற்றின் உரிமம் பறிக்கப்படும் என எச்சரித்துள்ளது. விதிகளை மீறுவோர் நூறு ரூபாய் அபராதம் செலுத்துவதுடன், 14 நாட்கள் தனிமைக் கண்காணிப்புக்கு உட்படுவர் என்றும் மாநகராட்சி ஆணையர் எச்சரித்துள்ளார்.