இஸ்லாமியர்கள் மீதான அவதூறு... அமீரகத்தில் அடுத்தடுத்து வேலையிழக்கும் இந்தியர்கள்...
ஐக்கிய அரபு அமீரகத்தில் பணியிலிருந்த மூன்று இந்தியர்கள் இஸ்லாம் மதம் குறித்து சமூக வலைத்தளத்தில் அவதூறு கருத்து பதிவிட்டதற்காகப் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
துபாயில் ஒரு உணவகத்தில் பணியாற்றிவந்த ராவத் ரோஹித், மற்றும் தனியார் நிறுவனம் ஒன்றில் காசாளராகப் பணிபுரிந்து வந்த ஒருவர் என இரண்டு பேர் இஸ்லாம் குறித்து அவதூறாக எழுதியதால் வேலையிலிருந்து நீக்கப்பட்டதாக கல்ப் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இதில், இத்தாலிய உணவகத்தில் பணியாற்றி வந்த ரோஹித் பணியிலிருந்து நீக்கப்பட்டதாக, அந்நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
அதேபோல ஷார்ஜாவில் நுமிக்ஸ் ஆட்டோமேஷன் நிறுவனத்தில் காசாளராகப் பணியாற்றும் இந்தியரும் இதே குற்றச்சாட்டால் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை முடியும் வரை அவருக்கு ஊதியம் வழங்கப்படாது எனவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்தியர்கள் யாரும் இஸ்லாம் குறித்து அவதூறான கருத்துகளை, சர்ச்சைக்குரிய வாசகங்களைச் சமூகவலைத்தளங்களில் பதிவிட வேண்டாம் எனக் கடந்த ஒரு மாதமாக இந்தியத் தூதரகம் எச்சரித்து வரும் சூழலில், தற்போது இந்தப் பணிநீக்கம் நடைபெற்றுள்ளது.
ஏற்கனவே, கடந்த வாரம் விஷால் தாகூர் என்ற பொய்யான பெயரில் சமூக வலைத்தளத்தில் இஸ்லாம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் எழுதிய இந்தியரைத் துபாயைச் சேர்ந்த டிரான்ஸ்கார்ட் குழுமம் வேலையிலிருந்து நீக்கியது குறிப்பிடத்தக்கது