16 நாட்களாக புதிய தொற்று இல்லை: பச்சை மண்டலத்தை நோக்கி நகரும் தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்ந்து கரோனா பாதிப்பு இல்லாத நிலையில் ஆரஞ்சு மண்டலத்தில் இருந்து பச்சை மண்டலத்தை நோக்கி இம்மாவட்டம் நகர்ந்து வருகிறது.


தூத்துக்குடி மாவட்டத்தில் 27 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதில் 26 பேர் முற்றிலும் குணமடைந்து வீடு திரும்பிள்ளனர். ஒரு மூதாட்டி இறந்துள்ளார்.இதனால் தற்போது கரோனா இல்லாத மாவட்டமாக தூத்துக்குடி மாறியுள்ளது. மேலும், 14 நாட்களாக புதிய தொற்று இல்லாத காரணத்தால் சிவப்பு மண்டலத்தில் இருந்து ஆரஞ்சு மண்டலத்துக்கு கடந்த 1-ம் தேதி மாறியது.


தொடர்ந்து 21 நாட்கள் புதிய தொற்று இல்லை எனில் அந்த மாவட்டம் பச்சை மண்டலமாக மாற்றப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. தூத்துக்குடியை பொறுத்தவரை கடந்த 16 நாட்களாக புதிய தொற்று இல்லை.


கடைசியாக கடந்த மாதம் 18-ம் தேதி ஒரு பெண்ணுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதன் பிறகு யாருக்கும் ஏற்படவில்லை. இன்னும் 5 நாட்கள் புதிய தொற்று ஏற்படவில்லை எனில் தூத்துக்குடி மாவட்டம் பச்சை மண்டலமாக மாறும்.


மாவட்டத்தில் புதிய தொற்று ஏற்படாமல் தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மாவட்ட ஆட்சியர் தலைமையிலான அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் செய்து வருகின்றனர்.


வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வருவோர் மூலம் தான் தொற்று பரவ வாய்ப்பு உள்ளது. எனவே, வெளி மாநிலம் மற்றும் மாவட்டங்களில் இருந்து வருவோர் எல்லைகளில் தடுத்து நிறுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.