டாஸ்மாக்கில் திருடி குவார்ட்டர் தானம்... கேப்டன் மைக்கேல் கைது..! அரை போதை கும்பல் அட்டூழியம்.

தூத்துக்குடியில் போதை மாத்திரை வாங்கி சாப்பிட்டும் போதை ஏறாததால் டாஸ்மாக் கடையை உடைத்து கொள்ளையடித்த குடிகார கும்பல் ஒன்று காவல்துறையினரிடம் சிக்கி உள்ளது.


கொள்ளையடித்த மதுபாட்டில்களை குடிமகன்களுக்கு தானமாக வழங்கிய கேப்டன் மைக்கேல் கும்பல் சிக்கிய பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு... தூத்துக்குடி வ.உ.சி மார்க்கெட் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு புகுந்த மர்ம கும்பல் ஒன்று அங்கிருந்து ஏராளமான குவார்ட்டர் மதுப்பாட்டில்களை அட்டைபெட்டிகளுடன் கொள்ளையடித்து சென்றது.


மதுக்கடைக்குள் ஒரு அட்டை பெட்டியும் அதில் இருந்த சில பாட்டில்களும் உடைந்து கிடந்தன. தரைப் பகுதியிலும் சுவற்றிலும் ரத்த துளிகள் காணப்பட்டது. கொள்ளையர்களில் ஒருவனுக்கு காலில் காயம் ஏற்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் டி.எஸ்.பி பிரகாஷ் தலைமையிலான தூத்துக்குடி மத்திய பாகம் போலீசார் விசாரணையை முன்னெடுத்தனர்.


அந்த பகுதியில் குடிபோதையில் இருந்த ஒருவரை பிடித்து டாஸ்மாக் கடை அடைத்திருக்கும் போது மது எப்படி கிடைத்தது ? என்று போலீசார் விசாரித்தனர்.


அதற்கு காலில் கட்டுடன், 16 வயதினிலே சப்பாணி போல நடந்து சென்ற சார்லஸ் என்பவர் விடையாக கிடைத்தார்.சார்லஸை பிடித்து சைடுடிஷ் கொடுத்து போலீசார் சிறப்பாக கவனிக்க, கேப்டன் மைக்கேல் தலைமையில் நள்ளிரவில் நடந்த டாஸ்மாக் ரெய்டு..! வெளிச்சத்திற்கு வந்தது. டாஸ்மாக் மூடப்பட்டுவிட்டதால் போதை கிடைக்காமல் கடுமையான வறட்சியில் தவித்த மைக்கேல் குழுவினருக்கு கந்தசாமி புரத்தில் மெடிக்கல் நடத்திவரும் டேவிட் என்பவர் போதை மாத்திரை விற்றுள்ளார்.


அந்த மாத்திரைகளை போட்டும் எதிர்பார்த்த போதை வராததால், அரைபோதையில் டேவிட்டிடம் நியாயம் கேட்டுள்ளனர். அதற்கு அவர் முழுசா போதையாகணும்னா டாஸ்மாக் கூரையைத் தான் பிரிக்கணும்ன்னு தமாசாக சொல்லி இருக்கிறார். இதனையே வேதவாக்காக எடுத்துக் கொண்ட கேப்டன் மைக்கேல்ராஜ், சார்லஸ், அந்தோணி, பிரவீன் ஆகிய 4 பேர் கொண்ட அரை போதை கும்பல், வ.உ.சி மார்கெட்டில் உள்ள டாஸ்மாக் கடையின் மாடியில் சரக்கு வைத்திருக்கும் குடோனுக்குள் ஏறி குதித்துள்ளனர்.


குடோனின் காட்போர்டு அட்டைகளை உடைத்து அதிரடியாக உள்ளே புகுந்தபோது ஒரு அட்டை பெட்டியில் உள்ள பாட்டில்கள் உடைந்து சார்லஸின் காலை கிழித்துள்ளது. இருந்தாலும் வீழ்ந்துவிடாத வீரத்துடன் அங்கிருந்து 5 குவார்ட்டர் பாட்டில் பெட்டிகளை களவாடி மேலே இருந்து தூக்கி போட்ட கீழே இருவர் நின்று பிடித்துள்ளனர். அப்போது ஒரு பெட்டியை பிடிக்காமல் தவறவிட்டதால் அதில் இருந்த பாட்டில்கள் கீழே விழுந்து உடைந்து சிதறியுள்ளது. ஆடைகளுக்குள்ளும் சில பாட்டில்களை சொறுகிக்கொண்டு இந்த குடிகார கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பியுள்ளனர்.


நாள் முழுவதும் ஆசை தீர மது குடித்தவர்கள். தங்கள் குழு தலைவர் மைக்கேல் ஆணைப்படி தங்கள் பகுதியில் உள்ள குடிமகன்களுக்கு எல்லாம் இலவசமாக மதுபாட்டில்களை வாரி வழங்கி உள்ளனர். இதில் ஒரு நேர்மையான குடிகாரர் தனக்கு மதுதானம் செய்தவர்களை அடையாளம் காட்ட மொத்த அரைபோதை கும்பலும் போலீசிடம் சிக்கியுள்ளது.


அவர்கள் மறைத்து வைத்திருந்த 10 மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன. அத்தியாவசிய சேவை என மருந்துக் கடைகள் திறந்திருக்க அரசு அனுமதி அளித்த நிலையில் போதை மாத்திரைகள் விற்றதோடு டாஸ்மாக் கொள்ளைக்கு ரூட்டு சொன்ன தேவனேசம் மெடிக்கல் அதிபர் டேவிட்டையும் போலீசார் கைது செய்தனர் கைது செய்யப்பட்ட 5 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல்துறையினர் அவர்களை சிறையில் அடைத்தனர்.


முழுபோதைக்கு ஆசைபட்டு அரைபோதையில் டாஸ்மாக்கில் கைவைத்த இந்த கறுஞ்சிறுத்தைகள் தற்போது சிறையில் கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறது.மொத்தத்தில் குடி குடியை மட்டுமல்ல கூட்டாளிகளையும் சேர்த்து கெடுக்கும்..!


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்