பிரசவத்திற்காக உறவினர் வீட்டிற்கு வந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று!

பிரசவத்திற்காக உறவினர் வீட்டிற்கு வந்த பெண்ணிற்கு கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது


சென்னையை அடுத்த ஜமின் பல்லாவரம் பகுதியைச் சார்ந்த பிரியா என்பவர் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) நொளம்பூரில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு பிரசவத்திற்காக வந்து தங்கிய அவருக்கு, அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று அவருக்கு பெண் குழந்தைப் பிறந்தது.


இந்நிலையில், அவருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டு, உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவருடன் தங்கியிருந்த உறவினர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று அறிகுறி உள்ளதா என ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.


நாளை அதன் முடிவுகள் வரும்வரை அவர்கள் அனைவரும் தங்களின் குடியிருப்பில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.


அவர்களுக்கு உணவு உள்ளிட்ட தேவையானவை அனைத்தும் வழங்கப்பட்டு வருகின்றன. அந்தப் பெண் இருந்த பகுதி முழுவதும் மூடப்பட்டுள்ளது. அவ்வழியாகச் செல்ல எவருக்கும் அனுமதி வழங்கப்படுவதில்லை.