டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டு மலேசியா தப்ப முயன்றவர்கள் கைது..!
விமானம் மூலம் சென்னையில் இருந்து மலேசியாவுக்கு செல்ல முயன்ற 10 பேர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
சென்னை விமான நிலையத்தில் இருந்து மலேசியாவுக்கு 137 பேர் நேற்று செல்ல முயன்றனர். அப்போது பயணிகளை குடியுரிமை அதிகாரிகள் பரிசோதனை செய்தனர். அப்போது, அவர்களில் 10 பேர் கடந்த மாதம் டெல்லியில் நடந்த தப்லீக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்றவர்கள் என்பது தெரியவந்தது.
கடந்தமாதம் சுற்றுலா விசா மூலம் இந்தியா வந்த அவர்கள் டெல்லியில் இருந்து திருவனந்தபுரம் சென்று அங்கிருந்து தென்காசியில் உள்ள தங்களது உறவினர் வீட்டில் சில நாட்கள் தங்கியுள்ளனர்.
தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா : எந்தெந்த மாவட்டங்கள்.. எத்தனை பேருக்கு?
இதனைத்தொடர்ந்து கொரோனா வைரஸ் பரவலை தடுக்க வெளிநாட்டுக்கு செல்ல விமானம் தடை செய்யப்பட்டதால் அவர்கள் மலேசியா திரும்ப முடியாமல் தென்காசியிலேயே இருந்துள்ளனர். இதையடுத்து மலேசியாவுக்கு சிறப்பு விமானம் இயக்கப்பட்டதால் சென்னை விமான நிலையத்தில் இருந்து அவர்கள் மலேசியா செல்ல முயன்றது தெரியவந்தது.
இதனால் அவர்கள் 10 பேர் மட்டும் மலேசியா செல்ல அனுமதிக்கப்படவில்லை. அதனைத்தொடர்ந்து 127 பேர் மட்டும் மலேசியா செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
இதனையடுத்து பிடிபட்ட 10 பேரையும் குடியுரிமை அதிகாரிகள் விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
விசரனையில்டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டுவிட்டு அவர்கள் இதுவரை கொரோனா மருத்துவப் பரிசோதனை எதுவும் செய்யவில்லை என்பது தெரியவந்தது.
10 பேரையும் விமான நிலைய போலீசார் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து 10 பேர் மீதும் 188 (அரசு உத்தரவை மீறுதல்), 269, 270, 271 (உயிர்க்கொல்லி தொற்று நோயை பரப்புதல்) மற்றும் தொற்றுநோய் தடுப்புச் சட்டம் பிரிவு 3, வெளிநாட்டவர் தடையை மீறி தங்குதல் தடுப்புச் சட்டப்பிரிவு 13, 14, பேரிடர் மேலாண்மை தடுப்புச்சட்டம் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கைதான பத்து பேரும் பூந்தமல்லி கொரோனா சிறப்பு சுகாதார மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.