டெல்லி முகாமிலுள்ள தமிழர்களுக்கு முறையான உணவில்லை! உரிய நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு வலியுறுத்தல்
டெல்லியில் முகாமில் தங்கவைக்கப்பட்டிருக்கும் தமிழர்கள் உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் தவித்து வருவதாக புகார் எழுந்துள்ளது.
டெல்லி மாநாட்டில் பங்கேற்க சென்ற தமிழகத்தை சேர்ந்த 200 பேர் ஊரடங்கால் சொந்த ஊர் திரும்ப முடியாமல் உள்ளனர். அவர்கள் அனைவரும் சுல்தான்புரியில் உள்ள முகாமில் தங்க வைக்கப்பட்டிருக்கும் நிலையில், முறையாக உணவு மற்றும் மருந்துகள் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
மூன்று வேலையும் குறைந்த அளவே உணவு வழங்கப்பட்டு வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில், முகாமில் தங்கியிருந்த கோவையை சேர்ந்த முஸ்தபா உடல்நலக்குறைவால் நேற்று உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக அதிர்ச்சி தெரிவித்துள்ள மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, டெல்லி முகாமில் தங்கியிருக்கும் தமிழர்களின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதிசெய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சுல்தான்புரி மையத்தில் தங்கியுள்ள தர்மபுரியை சேர்ந்த தமிழர் ஒருவர் பேசியபோது, 5 மாடிகள் கொண்ட தங்குமிடத்தில் 500 க்கும் அதிகமானவர்கள் உள்ளோம்.
காலை உணவு 11 மணிக்குதான் வருகிறது. அதுவும் போண்டா அல்லது பிரசாதம் அளவுக்கு அவல் மட்டுமே தருகிறார்கள். மதிய உணவு சரியான நேரத்தில் கிடைத்தாலும் அதுவும் குறைந்த அளவே தருகிறார்கள்.
மதிய உணவுதான் இரவும் தரப்படுகிறது. சர்க்கரை மற்றும் ஆஸ்துமா நோயாளிகள் அதிகம் உள்ளார்கள்.
உரிய நேரத்தில் மருந்து கிடைப்பதில்லை. காலை உணவுக்கு முன் சாப்பிட வேண்டிய உணவு மதியம்தான் கிடைத்தது.
இறந்தபின் நபர் கோவையை சேர்ந்தவர், அவருக்கு கொரோனா தொற்று இல்லை. ஆனால் மருந்து சரியான நேரத்தில் கிடைக்காததால் அவர் பலவீனமாகி இறந்துவிட்டார் என குற்றம்சாட்டுகிறார்