அவதூறு வி இந்தியர்கள்.. வார்னிங் கொடுத்த கோடீஸ்வரி.. சமாதானத்திற்கு வந்த தூதர்.
துபாய்: ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் இந்தியர்கள் அந்த நாட்டின் மதச்சார்பின்மைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொள்ளக் கூடாது.
அவர்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும் என்று ஐக்கிய அரபு ஆமீரகத்துக்கான இந்திய தூதர் பவன் கபூர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதேசமயம், பிரதமர் நரேந்திர மோடியும் இந்தியாவில் மதம் பார்த்து கொரோனாவைரஸ் பரவுவதில்லை என்று கூறியிருந்தார். இந்த இரண்டுக்கும் ஒரு பின்னணி உள்ளது தற்போது தெரிய வந்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 19ம் தேதி ஒரு டிவீட் போட்டிருந்தார். அதில் இப்படிக் கூறப்பட்டிருந்தது: கோவிட் 19 இனம், மதம், நிறம், ஜாதி, மொழி, எல்லை பார்த்து தாக்குவதில்லை.
ஒற்றுமை, சகோதரத்துவம் இதில்தான் நாம் அக்கறை காட்ட வேண்டும் என்று அதில் கூறப்பட்டிருந்தது.
இஸ்லாமியர்களால்தான் நாடு முழுவதும் கொரோனா பரவுவதாக சிலர் சமூக வலைதளங்களில் விஷமப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் பிரதமரின் இந்த டிவீட் வந்தது.
விஷமப் பிரச்சாரம் முற்றி அப்பாவி இஸ்லாமியர்கள் கடும் பாதிப்பை சந்தித்து வந்த நிலையில் மிகவும் சரியான நேரத்தில் பிரதமரின் இந்த அறிவுரை வந்து சேர்ந்தது. அது பெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்தியத் தூதர் பவன் கபூர்
பிரதமர் விடுத்த டிவீட்டைத் தொடர்ந்து அதை ரீவீட் செய்து அமீரகத்துக்கான இந்தியத் தூதர் பவன் கபூர் ஒரு டிவீட் போட்டார். அதில், இந்தியாவும், அமீரகமும் எந்த சூழ்நிலையிலும் பாரபட்சத்தை விரும்பாது, அனுமதிக்காது.
நமது தார்மீக நெறிகளுக்கு முரணானது இந்த பாரபட்சம். நமது சட்டத்திலும் அதற்கு இடமில்லை. ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் இந்தியர்கள் இதை எப்போதும் மனதில் கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தார். இது இன்னொரு ஆச்சரியமாக பார்க்கப்பட்டது.
பின்னணி என்ன
ஆனால் பவன் கபூரின் இந்த டிவீட்டுக்கு பின்னால் பல பரபரப்பான நிகழ்வுகள் அணிவகுத்து நிற்கின்றன.
என்ன என்று பார்த்தால், அமீரகத்தில் வேலை பார்க்கும் சில இந்தியர்கள் போட்ட துவேஷமான, ஆட்சேபேகரமான, மதரீதியிலான டிவீட்டுகள்தான் இந்த பரபரப்புக்குக் காரணம்.
இஸ்லாமுக்கும், இஸ்லாமியர்களுக்கும் எதிரான டிவீட்டுகள், இன்ஸ்டாகிராம் போஸ்ட்டுகள் உள்ளிட்டவை அதிகரித்தைத் தொடர்ந்து அமீரகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
உபத்திரவத்தில் சிக்கி உபாத்யாயா
குறிப்பாக அமீரகத்தில் வசித்து வரும் இந்தியாவைச் சேர்ந்தவரான செளரப் உபாத்யாய் என்பவர் முஸ்லீம்களுக்கு எதிராக போட்ட மிகக் கடுமையான டிவீட்டுகள் அந்த நாட்டில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி விட்டன.
அமீரகத்தைச் சேர்ந்த மிகப் பெரிய கோடீஸ்வர பெண்மணியான ஹென்ட் அல் குவாசிமி என்பவர் பகிரங்கமாக செளரபுக்கு எச்சரிக்கை விடுத்தார். நீங்கள் பேசுவதை நாங்கள் வேடிக்கை பார்க்க மாட்டோம் என்று கூறி கடும் எச்சரிக்கை விடுத்ததால் பயந்து போன செளரப் உடனடியாக தனது பதிவுகளை நீக்கி விட்டார்.
துவேஷமான கருத்துக்கள்
தப்லிகி ஜமாத் கூட்டத்துக்குப் போயிருந்த இஸ்லாமியர்களை தீவிரவாதிகள் என்று குறிப்பிட்டு அவர் டிவிட்டரில் தொடர்ந்து பதிவு போட்டு வந்தார். மேலும் இந்தியர்களால்தான் இன்று துபாய், போன்ற நகரங்கள் பெரிய நகரமாக ஜொலிக்கின்றன.
மத்திய கிழக்கில் இந்துக்கள் மோசமாக நடத்தப்பட்டார்கள் என்றும் டிவீட் போட்டிருந்தார். இளவரசியின் கடும் எச்சரிக்கையைத் தொடர்ந்து அவர் தனது டிவிட்டர் அக்கவுண்ட்டையே தற்போது நீக்கி விட்டார்.
பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா
மறுபக்கம் பாஜக எம்பியான கர்நாடகாவைச் சேர்ந்த தேஜஸ்வி சூர்யா 5 வருடத்திற்கு முன்பு போட்டிருந்த ஒரு மோசமான டிவீட்டை சிலர் தற்போது வைரலாக்கினர்.
அந்த டிவீட்டில், 95 சதவீத அரபுப் பெண்களுக்கு கடந்த ஐநூறு ஆண்டுகளாக ஆர்கஸமே வருவதில்லை. ஒவ்வொரு பெண்ணும் செக்ஸுக்குத்தான் குழந்தை பெறுகிறாரே தவிர காதலில் எந்தப் பெண்ணும் குழந்தை பெற்றுக் கொள்வதில்லை என்று கூறியிருந்தார். இது அப்போது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.
வைரலாகும் பழைய டிவீட்
இதையடுத்து குவைத்தைச் சேர்ந்த பெண் வழக்கறிஞரும், சர்வதேச மனித உரிமை அமைப்பின் இயக்குநருமான மெஜ்பெல் அல் சாரிகா பிரதமர் நரேந்திர மோடியை டேக் செய்து சூர்யாவின் வார்த்தைகளுக்குக் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
பல்வேறு இஸ்லாமிய நாடுகளைச் சேர்ந்தவர்களும் இதற்குக் கண்டனங்களைக் குவித்தனர். இதையடுத்து சூர்யா வேகமாக தனது டிவீட்டை டெலிட் செய்து விட்டார். ஆனால் அதன் ஸ்கிரீன் ஷாட்டை வைத்து தற்போது இதை வைரலாக்கி வருகின்றனர்.