ஊடகத்துறையினர் கரோனா பாதிப்பு வருத்தமளிக்கிறது" - மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்

கரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1553 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டு, 36 பேர் உயிரிழந்துள்ளனர்.


தமிழகத்திலும் கரோனா வைரஸின் தாக்கம் பெரிய அளவில் உள்ளது. இதுவரை 1,477 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


தற்போது மக்கள் நலன் ஒன்றை குறிக்கோளாக கொண்டு, உயிரைப் பற்றி கவலைப்படாமல் தொடர்ந்து உழைத்து வந்த மருத்துவர்கள்,  பத்திரிகையாளர்களுக்கு தற்போது கரோனா வைரஸ் பாதிப்பு உறுதிசெய்யப்படுவது தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.


இதற்கிடையில் சென்னையில் நாளிதழ் ஒன்றில் பணியாற்றி வந்த 24 வயது பத்திரிகையாளர் ஒருவர், தனியார் தொலைக்காட்சியில், உதவி ஆசிரியராக பணியாற்றி வந்த ஊடகவியலாளர்கள் 2 பேர் என மொத்தம் மூன்று பத்தரிகையாளர்களுக்கு நேற்று கரோனா வைரஸ் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டு, தற்போது அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


இந்நிலையில் ஊடகவியலாளர்கள் கரோனாவால் பாதிக்கப்படுவது வருத்தமளிக்கிறது என்றும், ஊடகவியலாளர்கள் யாருக்கெல்லாம் பரிசோதனை தேவையோ அவர்களுக்கு உடனடியாக பரிசோதனை செய்யப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.