பரிசோதிக்க வசதியில்லாமல் பெருகும் உயிர் பலி

நியூயார்க்: அமெரிக்க சுகாதார மையங்களில் பரிசோதனை நடத்த வசதியில்லாமல், பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.


அமெரிக்காவில், 9.57 லட்சம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது; 54 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். அங்கு, கடந்த இரண்டு மாதங்களில், சுகாதார மையங்களில் கொரோனா பலி, 11 ஆயிரத்தை தாண்டியுள்ள நிலையில், பரிசோதனை நடத்த வசதியில்லாமல், பல சுகாதார மையங்கள் திணறி வருகின்றன.


அமெரிக்காவில், 15 ஆயிரம் சுகாதார மையங்கள் உள்ளன. அவற்றில், மூன்றில் ஒரு பங்கு மையங்களில் மட்டுமே, கொரோனா பரிசோதனைக்கான வசதிகளும், உபகரணங்களும் உள்ளன.


சோதனையில் ஏற்படும் தாமதம் காரணமாக, உயிர் பலி அதிகரிக்கிறது. எனவே, விரைவாக பரிசோதனை கருவிகளை வழங்க வேண்டும் என, மருத்துவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


அமெரிக்காவில், தினமும், 1.50 லட்சம் பேருக்கு, கொரோனா பரிசோதனை நடைபெறுகிறது.