நான் கொரோனாவைவிட கொடூரமானவன்..உதார்விட்ட அர்ஜூன் சம்பத் கட்சி மா.செ.வுக்கு லாடம் கட்டியது போலீஸ்

வாலஜா: தாம் கொரோனாவை விட கொடூரமானவன் என லாக்டவுனை மதிக்காமல் போலீசாரை மிரட்டும் வகையில் ஊர் சுற்றிக் கொண்டிருந்த இந்து மக்கள் கட்சியின் நிர்வாகி சதீஷை வாலஜாபேட்டை போலீசார் கைது செய்துள்ளனர்.


நாடு முழுவதும் 12-வது நாளாக லாக்டவுன் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் பல நகரங்களில் லாக்டவுனை பொருட்படுத்தாமல் பொதுமக்கள் நடமாடி வருகின்றனர்.


இத்தகைய நபர்களை கைது செய்தும் வழக்குப் பதிவு செய்தும் கூட அசரமறுத்து வழக்கம் போல ஊர் சுற்றி வருகின்றனர். அதுவும் கட்சி பெயரை பயன்படுத்தி போலீசாரை மிரட்டுகிற சம்பவங்களும் நடைபெறுகிறது.


வாலஜாபேட்டையில் இந்து மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் சதீஷ் இதேபோல் நகர்வலம் வந்திருக்கிறார். அவரை போலீசார் பலமுறை எச்சரித்தும் எந்த பலனும் இல்லை.


அத்துடன், நான் கொரோனாவை விட கொடூரமானவன்; என்னை கொரோனா எதுவும் செய்யாது என்று போலீசாரிடம் தெனாவெட்டு காட்டியிருக்கிறார். மேலும், என்னை வீட்டில்தான் இருக்க வேண்டும் என்று சொல்ல போலீஸ் யார்? என எதிர்கேள்வி கேட்டு தகராறு செய்திருக்கிறார்.


தற்போது உதார்விட்ட சதீஷ் மீது ஊரடங்கை மீறுதல், போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 5 வழக்குகள் பாய்ந்துள்ளது. ஊரடங்கை மதிக்காமல் ஊர்சுற்றிய சதீஷ் இப்போது சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.