சென்னையில் வாகன தணிக்கையை தீவிரப்படுத்த காவல்துறைக்கு தமிழக உத்தரவு!

சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், வாகன தணிக்கையை தீவிரப்படுத்த காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.


இதுவரை 358 பேர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் மட்டும் 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.


இதனால் மாநகர காவல்துறையினர் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட உள்ளனர். ஊரடங்கு காலத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட நேரத்தை பயன்படுத்தி தேவையின்றி வெளியே சுற்றித்திரிவோரை கட்டுப்படுத்த, சென்னை முழுவதும் வாகன தணிக்கையை தீவிரப்படுத்த காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


ஊரடங்கை மதிக்காமல் சுற்றித்திரிபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ள காவல்துறை, கண்காணிப்பை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.


மேலும், அத்தியாவசிய தேவைகளுக்காக இருசக்கர வாகனத்தில் செல்ல ஒருவருக்கு மட்டுமே காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. இதை மீறி ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் பயணித்தால் உடனடியாக வாகனத்தை பறிமுதல் செய்யவும் காவல்துறைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.