பத்திரிகையாளர்களுக்கு மருத்துவக் காப்பீடு பரிசீலிக்கப்படும்: அமைச்சர் கடம்பூர் ராஜூ

அத்தியாவசியப் பணிகளில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் உள்ளிட்டவர்களுக்கு வழங்கப்பட்டது போல் பத்திரிக்கையாளர்களுக்கும் காப்பீடு வழங்குவது சம்பந்தமாக பரிசீலித்து முடிவெடுக்கப்படும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.


கோவில்பட்டி நகராட்சி அலுவலகத்தில் காவல்துறை மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு சத்து மாத்திரை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமை வகித்தார். அமைச்சர் கடம்பூர் ராஜூ, காவல்துறை மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு சத்து மாத்திரைகள், கபசுரக் குடிநீர் வழங்கினார்.


தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அமைச்சர், சலவைத் தொழிலாளர்கள், முடிதிருத்தும் தொழிலாளர்கள், மாற்றுத்திறனாளிகள், ஆட்டோ ஓட்டுனர்கள் ஆகியோருக்கு அரிசி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வழங்கினார்.


நிகழ்ச்சிகளில் கோட்டாட்சியர் விஜயா, வட்டாட்சியர் மணிகண்டன், நகராட்சி ஆணையர் ராஜாராம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மாணிக்கவாசகம், வசந்தா, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சத்யா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறும்போது, தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த 2 பேர் குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளனர். மாவட்டத்தைப் பொறுத்தவரை மொத்தம் 27 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர்.


இதில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 26 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். இதில் இதுவரை 25 பேர் குணமடைந்து வீடு திரும்பும் நிலையை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்துள்ளது. உலகலாவிய அளவில் மக்கள் கரோனா வைரஸ் தாக்கத்தில் இருக்கின்றனர். இந்த நேரத்தில் பொன்மகள் வந்தாள் திரைப்படம் ஆன்லைனில் வெளியிடுவது தொடர்பாக பேசுவதற்கு கால அவகாசம் உள்ளது.


இதை இப்போது பிரச்சினையாக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறோம். மே 3-ம் தேதிக்கு பின்னர் அரசை அணுகினால் இரு தரப்பையும் அழைத்துப் பேசி சுமுகமான தீர்வு காண முடியும். பத்திரிக்கையாளர்களை காக்கின்ற அரசாக தமிழக அரசு உள்ளது. அத்தியாவசியப் பணிகளில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் உள்ளிட்டவர்களுக்கு வழங்கப்பட்டது போல் பத்திரிக்கையாளர்களுக்கும் காப்பீடு வழங்குவது சம்பந்தமாக பரிசீலித்து முடிவெடுக்கப்படும், என்றார் அவர்.