அமைச்சர்களின் பினாமி பெயரில் ஊரடங்கு நாளில் பத்திரப்பதிவு: பதிவுத்துறை உயர் அதிகாரிகள் உடந்தையுடன் நடந்தது
சென்னை: ஊரடங்கு நாளில் அமைச்சர்களின் பினாமிகள் பெயரில் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
இது உயர் அதிகாரிகளுக்கு தெரிந்து நடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொடிய கொரோனா வைரஸ் இந்தியாவை தாக்கியதில் இருந்து அதிலிருந்து மீண்டு வர நாடு முழுவதும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
மத்திய, மாநில அரசுகள் முழு கவனமும் செலுத்தி தீவிரமாக களப்பணியாற்றி வருகின்றனர். அதனடிப்படையில் அனைத்து மாநிலங்களும் மத்திய அரசின் ஊரடங்கு உத்தரவை முழுவீச்சுடன் செயல்படுத்தி வருகின்றன. தமிழகத்திலும் அவ்வாறு பல்வேறு அரசாணைகள் அவ்வப்போது பிறப்பிக்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகின்றன.
தனியார் நிறுவனங்கள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள், மால்கள் மட்டுமல்லாது அரசு துறைகளுக்கும் மூடப்பட்டன.
காவல்துறை, சுகாதாரம், உள்ளாட்சி, வருவாய் துறையினர் மட்டுமே பணிக்கு வரவேண்டும் என்று அந்த துறைகள் அத்தியாவசியப் பணிகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டன.
ஆனால்கொஞ்சம்கூட முக்கியத்துவம் இல்லாத மக்களுக்கு அத்தியாவசியமாக தேவைப்படாத, பத்திரப் பதிவுத் துறையில் இந்த ஒன்றரை மாத ஊரடங்கு காலத்தில் துறை அதிகாரிகளின் நிர்வாக திறமை இன்மையாலும் ஒருவருக்கொருவர் ஒருங்கிணைப்பு இல்லாததாலும் அல்லது யாருக்கோ உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடனும் பத்திரப் பதிவுத் துறை அலுவலகம் செயல்படுவது தொடர்பாக பல்வேறு குளறுபடியான ஆணைகள் பிறப்பிக்கப்பட்டு வருகின்றன. மத்திய அரசின் அறிவிப்பை தொடர்ந்து தமிழ்நாடு அரசும் கடந்த மார்ச் 25 முதல் ஏப்ரல் 14 வரை முழு ஊரடங்கு அறிவித்தது.
ஆனால் அனைத்து துறைகளும் அலுவலகங்களும் மூடி இருக்கும்போது பதிவுத்துறை தலைவர் அலுவலகம் மட்டும் தமிழ்நாட்டில் உள்ள 575 சார்பதிவாளர் அலுவலகங்கள், மாவட்ட பதிவாளர் அலுவலர்கள், துணை பதிவுத்துறை தலைவர் அலுவலகம் ஆகியவை ஊரடங்கு காலத்திலும் தொடர்ந்து இயங்க வேண்டும் என்று பதிவுத் துறை தலைவர் ஆணை பிறப்பித்தார்.
இந்த ஆணைக்கு பதிவுத்துறையில் உள்ள பல்வேறு சங்கங்களும் எதிர்ப்பு தெரிவித்தன. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆவணப் பதிவை புறக்கணிக்கப் போவதாக ஆவண எழுத்தர்கள் அவர்களது சங்கத்தின் மூலம் முதலமைச்சருக்கும் கடிதம் எழுதினர்.
அதன்பிறகு பதிவுத்துறை அலுவலகங்கள் அத்தியாவசிய பணி என்று குறிப்பிடாமல் இருந்த போதிலும் சார்பதிவாளர்கள் தொடர்ந்து இயங்க வேண்டும் என்று பதிவுத்துறை தலைவர் அனைவருக்கும் சுற்றறிக்கை அனுப்பினார்.
அதன் அடிப்படையில் சார்பதிவாளர்கள் மற்றும் அனைத்து பணியாளர்களும் மிகுந்த அச்சத்திற்கு இடையே ஒரு சில நாட்கள் இயக்கினர். ஆனால் ஆவணங்கள் பதிவு செய்வதற்கு பொதுமக்கள் யாரும் முன்வராத காரணத்தினால் தினமும் ஒன்றிரண்டு ஆவணங்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டன.
அதன்பிறகு புதியதாக பிறப்பிக்கப்பட்ட அரசாணைப்படி சார்பதிவாளர் அலுவலகங்கள் அனைத்தும் மூடப்பட்டன. அதன் பிறகு மீண்டும் கடந்த ஏப்ரல் 20ம் தேதி முதல் சார்பதிவாளர் அலுவலகங்கள் செயல்படத் தொடங்கின. இவ்வாறு செயல்படுவதற்கு எந்த அரசாணையும் பிறப்பிக்கப்படவில்லை. பதிவுத் துறை தலைவரின் தன்னிச்சையான முடிவால், திறக்கப்பட்டதாக கூறப்பட்டது. இதனால், ஆவணங்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்தது.
அதாவது ஒரு நாள் ஒன்றுக்கு 24 ஆவணங்கள் மட்டுமே பதிவு செய்ய முடியும் என்ற அடிப்படையில் கடந்த ஏப்ரல் 20ம் தேதி முதல் சார்பதிவாளர் அலுவலகங்கள் திறக்கப்பட்டன. பல்வேறு நிபந்தனைகளுடன் எந்த அரசு அலுவலகமும் பின்பற்ற முடியாத பல்வேறு நிபந்தனைகளுடன் பதிவுத்துறை தலைவர் உத்தரவு அடிப்படையில் திறக்கப்பட்டன.
அதன் அடிப்படையில் சார்பதிவாளர் அலுவலக ஊழியர்கள் கஷ்டப்பட்டு அலுவலகத்தில் சென்றனர். எதிர்பார்த்தபடி ஆவணங்கள் ஏதும் பதிவாகவில்லை. ஏப்ரல் 20ம் தேதியிலிருந்து தினமும் ஒவ்வொரு அலுவலகத்திலும் இரண்டு அல்லது மூன்று ஆவணங்கள் மட்டுமே பதியப்பட்டன.
இங்குதான் பெரிய மர்மம் அடங்கியுள்ளது. ஏப்ரல் 22 அன்று நிறைந்த அமாவாசை நாளாகும். இந்த நாளில் அதிகார மட்டத்தில் உள்ள முக்கிய புள்ளிகளுக்கு ஆவணங்கள் பதிவு செய்ய வேண்டியது இருந்த காரணத்தினால் தான் 20ம் தேதி முதல் சார்பதிவாளர் அலுவலகங்கள் அனைத்தும் செயல்பட வேண்டும் என்று மத்திய அரசை ஏமாற்றி மாநில அரசு உத்தரவிடாத நிலையிலும், பதிவுத்துறை தலைவர் தன்னிச்சையாக ஒரு முடிவு எடுத்து அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
ஏப்ரல் 22ம் தேதி அமாவாசை தினத்தன்று மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆளும் அமைச்சர்கள் மற்றும் அவர்களின் பெயரில் நிறைய சொத்துக்கள் பதிவு செய்யப்பட்டதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. குறைந்தது நான்கு அல்லது ஐந்து அமைச்சர்கள் இதில் மறைமுகமாக ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. அமைச்சர்களின் அழுத்தத்திற்கு அடிபணிந்து பதிவுத் துறையில் உள்ள ஆயிரக்கணக்கான ஊழியர்களையும், அங்கு வரும் பொதுமக்களையும் கொரோனா தொற்று ஏற்படுவதற்கு ஒரு கருவியாக பதிவுத்துறை உயர் அதிகாரிகள் செயல்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இதை உறுதிப்படுத்தும் வகையில் 22 ஏப்ரல் அன்று பதிவான ஆவண விவரங்கள் பதிவுத் துறையின் இணையதளத்தில் மற்றும் அவர்களுக்குள் பகிரப்படும் தினசரி பதிவுகள் தொடர்பான விவரங்களும் வருவாய் தொடர்பான விவரங்களும் காணப்படவில்லை. இதனை இணையதளத்தில் தெரியாதவாறு உயர் அதிகாரிகள் முடக்கியுள்ளனர்.
வழக்கமாக பத்திரப்பதிவு செய்யப்பட்டால், தமிழகத்தில் எந்த இடத்தில் இருந்து வேண்டுமானாலும், பத்திரப்பதிவு அதிகாரிகள் தகவல்களை பார்க்க முடியும். ஆனால் 22ம் தேதிக்கு முன்னர் உள்ள அனைத்து ஆவணங்களையும் அதிகாரிகள் இணையதளத்தில் பார்க்க முடிகிறது. 22ம் தேதி மட்டும் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. 23, 24, 25ம் தேதிகளில் பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள் இணையதளத்தில் பார்க்க முடிகிறது. பதிவுத்துறை உயர் அதிகாரிகளின் இந்த தில்லுமுல்லுகளில் இருந்து, சார்பதிவாளர் அலுவலகங்கள் எதற்காக திறக்கப்பட்டன என்ற செயல் தற்போது தெரிய வந்துள்ளது.
மேலும், 22ம் தேதி பல அமைச்சர்களும் முக்கிய தென் மாவட்ட விஐபி ஒருவரும் தங்களது சொந்த ஊரில்தான் இருந்தனர். மேலும் சிலர் இதற்காக சென்னையில் இருந்து முதல்நாள் தான் சொந்த ஊருக்கு புறப்பட்டுச் சென்றதாகவும் கூறப்படுகிறது.
இதனால் 22ம் தேதி பதிவான ஆவணங்களை விசாரித்தாலே, அமைச்சர்கள் சிக்கிவிடுவார்கள் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். பத்திரப்பதிவு உயர் அதிகாரியும் ெதன் மாவட்டத்தைச் சேர்ந்தவர். அவர் சில அமைச்சர்களுக்கு உறவு முறை என்றும் கூறப்படுகிறது. இதனால், 22ம் தேதி நடந்த பத்திரப்பதிவு குறித்து மத்திய, மாநில அரசுகள் விசாரணை நடத்தினால் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று கூறப்படுகிறது.