ஊரடங்கு நேரத்தில் வீட்டில் பெண்கள் மீது வன்முறைகள் ஏவப்பட்டால் கடும் நடவடிக்கை : ஏடிஜிபி ரவி எச்சரிக்கை

சென்னை : ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள சூழலில் வீட்டுக்குள்ளே பெண்கள் மீது வன்முறைகள் ஏவப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் கூடுதல் டிஜிபி ரவி எச்சரித்துள்ளார்.  


ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் இந்த நேரத்தில் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறைகள் நிகழ்வதாக காவல் துறைக்கு புகார்கள் வந்த வண்ணம் உள்ளதாகவும், அவ்வாறான புகார்கள் வந்தால், அவற்றின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக காவல்துறை சார்பாக கூடுதல் ஏடிஜிபி ரவி, ஐபிஎஸ் தெரிவித்துள்ளார்.


இதுபற்றி பேசும்போது அவர், “இந்த ஊரடங்கு அமலில் இருக்கின்றபோது, பெண்கள் மீது வன்முறைகள் ஏவப்படுவதாக எங்களுக்கு தகவல்கள் வந்தவண்ணம் இருக்கின்றன.


அப்படி யாராவது பெண்கள் மீது குற்றச்செயல்களில் ஈடுபட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், இந்த தருணத்திலே பெண்கள் மிகவும் கடினமாக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.


அவர்களை பாராட்ட வேண்டுமே ஒழிய, அவர்கள் மீது வன்முறையை ஏவினால் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற செயல்களில் யாராவது ஈடுபட்டால் 181, 1091, 100 உள்ளிட்ட தொலைபேசி எண்களின் மூலமாகவோ, காவலன் ஆப் மூலமாகவோ தகவல் தெரிவிக்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.