எங்கள் மீதும் கனிந்த பார்வை காட்டுங்கள்: அரசிடம் நிவாரணம் கோரும் புகைப்படக் கலைஞர்கள்
ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள தங்களுக்கும் தமிழக அரசு நிவாரண உதவிகள் செய்து தர வேண்டும் என்று புகைப்படக் கலைஞர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து புகைப்படக் கலைஞர் ஒருவர் கவிநயத்துடன் விடுத்துள்ள கோரிக்கை: ‘புகைப்பட கலைஞர்கள் வீட்டு அடுப்புப் புகையவில்லை, பூனைகள் படுத்து உறங்கும் அபாயம். கரோனாவின் கோரப் பிடியில் சிக்கி மூச்சு திணறிக் கிடக்கிறார்கள் புகைப்படக் கலைஞர்கள். கண்ணீரைத் துடைக்குமா தமிழக அரசு?
சுப நிகழ்ச்சிகள், பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அனைவரையும் ‘ஸ்மைல் ப்ளீஸ்’ என சிரிக்க வைத்துப் படமாக்கும் கலைஞன் இப்போது தனது சிரிப்பைத் தொலைத்துவிட்டான். நிழல்களை நிஜமாக்கி, தனது எண்ணங்களை வண்ணங்களாக்கிய ஒளிப்படக் கலைஞன், இன்று ப்ளாக் அண்டு ஒயிட் காலத்துக்குத் தள்ளப்பட்டு விட்டான்.
அரசு அறிவித்த சுயஊரடங்கை முறையாகப் பின்பற்றி தனது சிந்தனைக் குதிரைக்குக் கடிவாளம் போட்டவனின் இதயத்தில் , ‘கரோனா பாதிப்பு குறையாமல் போனால் தொடர்ந்து நீடிக்கும் இந்நிலை’ என்ற செய்தி இடியாய்த் தாக்குகிறது.
வருடத்தில் வரும் சுப முகூர்த்தங்களை நம்பி இருந்த புகைப்படக் கலைஞனின் நிலையோ இன்று கண்டத்தில் சிக்கிச் சீரழியும் நிலையாக மாறிப்போனது. உதவிக்கரம் கிடைக்குமா என விண்ணின் மழைத்துளிக்காக ஏங்கிக் காத்திருக்கும் டெல்டா விவசாயி போல புகைப்படக் கலைஞனும் காத்திருக்கிறான்.
கனிந்த பார்வையைக் காட்டுமா தமிழக அரசு?’
இவ்வாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்