இறைவன் மனிதகுலத்தைக் கைவிட்டுவிடவில்லை.

ரமலான் மாதம் எத்தகையதென்றால் அந்த மாதத்தில்தான் மனிதர்களுக்கு முழுமையான வழிகாட்டியாகவும், மேலும் நேர்வழியின் தெளிவான அறிவுரைகளைக் கொண்டதும், சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்துக்காட்டக் கூடியதுமான குர்ஆன் இறக்கி அருளப்பட்டது.


எனவே இனி உங்களில் எவர் அந்த மாதத்தை அடைகிறாரோ அவர் அந்த மாதம் முழுவதும் நோன்பு நோற்க வேண்டும்.”(குர்ஆன் 2:185) புனித ரமலான் மாதம் தூய வேதம் அருளப்பட்ட மாதமாகும். மனித குலம் தோன்றியதிலிருந்து மனிதர்களுக்கு நேர்வழி காட்டும் பொறுப்பையும் இறைவனே ஏற்றுக்கொண்டுள்ளான்.


“நான் படைத்துவிட்டேன், எப்படியாவது வாழ்ந்துதொலையுங்கள்” என்று இறைவன் மனிதகுலத்தைக் கைவிட்டுவிடவில்லை. காலங்கள் தோறும் ஒவ்வொரு சமுதாயத்திற்கும் நேர்வழி காட்ட இறைவன் தன் சார்பாகத் தூதர்களை அனுப்பினான். அவர்களுக்கு வேதத்தையும் அருளினான்.


அந்தந்தக் காலத்தில் வாழ்ந்த இறைத்தூதர்கள் தங்களுக்கு அருளப்பட்ட வேதத்தின் அடிப்படை யில் தாமும் செயல்பட்டு மனிதர்களுக்கும் நேர்வழியைக் காட்டிவந்தனர். இந்தத் தொடர்ச்சியில் இறுதியாக அருளப்பட்ட வேதம்தான் குர்ஆன்.


இதர வேதங்கள் எல்லாம் அந்தந்தக் காலத்தில், அந்தந்தச் சமுதாயத்தினருக்கு மட்டுமே அருளப்பட்டவையாகும். ஆனால் இறுதி வேதமான குர்ஆன் உலக மக்கள் அனைவருக்கும் அனைத்துக் காலங்களுக்கும் அனைத்துச் சமுதாயத்தினருக்கும் அருளப்பட்ட தாகும்.


🟢இது இறைவன் மனிதகுலத்திற்குச் செய்த மாபெரும் அருளாகும். அந்த மகத்தான அருளுக்கு நன்றி செலுத்தும் வகையில் தான் இந்தப் புனித மாதத்தில் நோன்பு எனும் வழிபாடு கடைப்பிடிக்கப்படுகிறது. சரி, நோன்பு நோற்பதன் நோக்கம் என்ன? குர்ஆன் கூறுகிறது: “இதன்மூலம்(நோன்பை நிறைவேற்றுவதன் மூலம்) நீங்கள் இறையச்சமுள்ளவர்களாய்த் திகழக்கூடும்.


”(குர்ஆன் 2:183) இறையச்சம்-பயபக்தியைக் குறிக்க குர்ஆனில் ‘தக்வா’ எனும் சொல் ஆளப்படுகிறது. இந்தச் சொல்லுக்கு இறைவனுக்கு அஞ்சி வாழ்தல், இறைச்சட்டங்களுக்குக் கீழ்ப்படிந்து வாழ்தல், நேர்வழியில் பொறுமையுடன்- நிலைகுலையாமல் இருத்தல், தீமைகளிலிருந்து விலகி வாழ்தல், புண்ணியங்களின்- நற்செயல்களின் அடிப்படையில் மட்டுமே வாழ்வை அமைத்துக்கொள்ளுதல் என்று பொருள் விரியும்.


இந்த அனைத்துப் பயிற்சிகளும் நோன்பின் மூலம் அடியார்களுக்குக் கிடைக்க வேண்டும் என்பதே நோன்பு கடமையாக்கப்பட்டதன் நோக்கம் ஆகும். இந்த உயர்ந்த பயிற்சிகளை அளிக்க ஒன்றிரண்டு நாட்கள் போதாது. அதனால்தான் வேதம் அருளப்பட்ட மாதமான ரமலானின் முப்பது நாட்களும் இந்தப் பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது.


குறிப்பிட்ட நேரத்தில் எழுந்துவிட வேண்டும், குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே சாப்பிட வேண்டும், குறிப்பிட்ட நேரங்களில் தொழ வேண்டும், குறிப்பிட்ட மணிநேரங்களில்தான் நோன்பு வைக்க வேண்டும், குறிப்பிட்ட நேரத்தில் நோன்பைத் துறந்துவிட வேண்டும் என எல்லாமே திட்டமிட்ட வகையில் தொடர்ந்து ஒரு மாதம் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த ஒரு மாதம் பெறப்படும் இத்தகைய தூய ஆன்ம நலப் பயிற்சி ஆண்டின் இதர பதினோரு மாதங்களிலும் எதிரொலிக்க வேண்டும்.


அப்போதுதான் நோன்பின் நோக்கம் நிறைவேறும். இந்த ரமலான் மாதத்தில் நோன்புக் கடமையை நிறைவேற்றுவோம்...எல்லாம்வல்ல இறைவனின் வற்றாத அருளைப் பெறுவோம்.


- 🟢சிராஜுல்ஹஸன் 🟢இந்த வார சிந்தனை “(ரமலான் மாதத்தில்)எவரேனும் நோயாளியாகவோ பயணத்திலோ இருந்தால் அவர் மற்ற நாட்களில் கணக்கிட்டு நோன்பு நோற்றிட வேண்டும். இறைவன் உங்களுக்கு இலகுவை விரும்புகிறான். சிரமத்தைத் தர விரும்பவில்லை.” ( குர்ஆன் 2:185)


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு