ஏழை எளிய மக்கள், வேலையில்லாமல் தவிக்கும் வெளிமாநில தொழிலாளர்களுக்கு உணவுப் பொட்டலங்கள் மதுரவாயல் காவல் நிலையத்தில் தயார் செய்து வழங்கப்படுகிறது.

சென்னையில் ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு வீடு தேடிச் சென்று உணவு வழங்கும் பணியை மதுரவாயல் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் தலைமையிலான போலீஸ் டீம் செய்துவருகிறது.


கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க ஊரடங்கு உத்தரவு நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.


இதனால் மக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். அன்றாட தினக்கூலிகள் வருவாய் இல்லாமல் சாப்பிடக்கூட வழியில்லாமல் தவித்து வருகின்றனர்.


அதோடு மதுரவாயல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தங்கியிருக்கும் வெளிமாநில தொழிலாளர்களும் பல்வேறு சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர்.


இதற்காகக் காவல் நிலையத்தில் ஒரு அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளது. அதில், `கொரோனா வைரஸ் பரவாமல் தவிர்க்க தற்போது தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் ஆதரவற்றோர், ஏழை எளிய மக்கள், வேலையில்லாமல் தவிக்கும் வெளிமாநில தொழிலாளர்களுக்கு உணவுப் பொட்டலங்கள் மதுரவாயல் காவல் நிலையத்தில் தயார் செய்து வழங்கப்படுகிறது.


உணவுப் பொட்டலங்கள் வேண்டுவோர் 9498100119, 044-2352766 என்ற காவல் நிலைய எண்களுக்கு தொடர்பு கொண்டால் தங்கியிருக்கும் இடத்திற்கே நேரில் வந்து உடனடியாக உணவுப் பொட்டலங்கள் வழங்கப்படும்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.