லத்தி உண்டாக்காத விழிப்புணர்வை மைக் உண்டாக்கிவிடும்...

புவனகிரி கடைவீதியில் காவலர் உடையோடு நின்று பாடிக்கொண்டிருக்கிறார் பொன்.சிவபெருமான். துணைக் கண்காணிப்பாளர், ஆய்வாளர் உள்ளிட்டவர்களும் அருகில் நிற்கிறார்கள். சிவபெருமானின் செல்பேசியில் தொடர்ந்து வீட்டிலிருந்து அழைப்பு வந்துகொண்டே இருக்கிறது.


வீட்டிலிருந்து வந்திருந்தது ஒரு முக்கியமான செய்தி; அப்போது காலை மணி 10. ஆனால், வெறும் பத்து கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் சேத்தியாதோப்புக்கு சிவபெருமான் செல்லும்போது இரவு 11 மணி ஆகியிருந்தது.


கடலூர் மாவட்டம் மருதூர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரியும் அவர் தனது காவல் நிலையத்துக்கு உட்பட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குத் தெருத்தெருவாகச் சென்று, தானே இயற்றிய பாடல்களைப் பாடி மக்களிடம் கரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார். த


முழுவதும் 1.25 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஊரடங்கை மீறியதாகக் கைதுசெய்யப்பட்டிருக்கும் நிலையில், மருதூர் சரகத்துக்குள் அப்படியானவர்களின் எண்ணிக்கை கட்டுக்குள் இருக்க சிவபெருமானின் பிரச்சாரமும் ஒரு காரணம் என்கிறார்கள் காவல் துறை அதிகாரிகள்.


எல்லா ஊர்களிலும் காவல் துறையினர் வெளியே சுற்றுபவர்களைக் குறைக்க லத்தியைக் கையில் சுழற்றுகிறார்கள். மைக்கை எடுக்கும் யோசனை எப்படி உங்களுக்கு வந்தது?


பொத்தாம்பொதுவாக அப்படிச் சொல்லிவிட முடியாது. ஒருபுறம் கண்டிப்பு காட்டினாலும், மறுபுறம் மக்களிடம் விழிப்புணர்வை உண்டாக்குவது மட்டுமே நிரந்தரமான மாற்றத்தை உண்டாக்கும் என்பதை உணர்ந்து பல முயற்சிகளையும் காவல் துறை செய்துதான்வருகிறது.


கலையை அரசியல் மாற்றங்களுக்கே ஒரு உத்தியாகக் கையாண்ட மண் இது. அதனால், இங்கே நான் மைக்கை எடுத்துவிட்டேன். லத்தி உண்டாக்காத விழிப்புணர்வை மைக் உண்டாக்கிவிடும் என்ற நம்பிக்கைதான். மக்களிடம் இதற்குக் கிடைத்த வரவேற்பைப் பார்த்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீஅபினவ், சிதம்பரம் துணைக் காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் இருவரும் ஒரு கலைக் குழுவையே உருவாக்கிவிட்டார்கள். அடுத்து, இப்போது மாவட்டம் முழுமைக்கும் குழுவினரோடு பயணிக்கிறேன்.


அன்றாடப் பணியை இப்போது சொல்லுங்களேன்…


வீட்டிலிருந்து காலை ஆறு மணிக்குக் கிளம்புகிறேன்; காவல் நிலையத்தில் ஏழு மணிக்கெல்லாம் ஆஜர் கொடுத்துவிட்டுப் பிறகு, ஆட்டோவில் ஏறிவிடுவேன். ஒவ்வொரு கிராமமாகச் செல்கிறேன். ஒவ்வொரு தெருமுனையிலும் நிறுத்தம். பாட்டு.


அடுத்து இந்தக் கிருமியின் அபாயத்தை விளக்கிக் கொஞ்சம் பேச்சு. மக்கள் உன்னிப்பாகக் கவனிக்கிறார்கள். ஒரு நாளைக்கு முப்பது இடங்களில் இப்படிப் பாடுகிறேன். வீட்டுக்குத் திரும்ப இரவு பத்து மணி ஆகிவிடும்.


கிராமங்களில் மக்களுடைய விழிப்புணர்வு எப்படி இருக்கிறது?


எனக்கென்னவோ நகரங்களைக் காட்டிலும் கிராமங்களில் கொஞ்சம் கூடுதல் விழிப்புணர்வோடு மக்கள் இருப்பதாகத் தோன்றுகிறது. அதாவது, அவர்களுக்கு உரிய தகவல்களைச் சொல்லிவிட்டால் மிக ஜாக்கிரதையாக இருக்கிறார்கள்.


விவசாயம் தடையில்லாமல் நடக்க நகரங்களைக் காட்டிலும் கூடுதலான மக்கள் அங்கே நடமாட வேண்டியிருந்தாலும், நிறைய இடைவெளியைப் பராமரிக்கிறார்கள். தேவையில்லாமல் வெளியே சுற்றுபவர்கள் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது.


வெளியூர்க்காரர்கள் யாரும் உள்ளே வராமல் பார்த்துக்கொள்கிறார்கள்; அப்படி வருபவர்களை விசாரித்துவிட்டுதான் உள்ளே அனுமதிக்கிறார்கள். வெளிநாட்டிலிருந்தோ வெளியே நகரங்களிலிருந்தோ ஊருக்குத் திரும்பியவர்களை இரண்டு வாரம் வீட்டிலேயே தனிமையில் இருக்குமாறு ஊர்க்காரர்களே வலியுறுத்துவதோடு அவர்களுக்குத் தேவையானவற்றையும் வாங்கிக் கொடுக்கிறார்கள்.


மீறி வெளியே சுற்ற முற்பட்டால் காவல் துறைக்குத் தகவல் தருகிறார்கள். முக்கியமாக, சோப்பு போட்டுக் கை கழுவும் பழக்கமும் முகக்கவசமும் புதிய கலாச்சாரமாக நம்முடைய கிராமங்களில் புகுந்திருக்கிறது. இந்த விழிப்புணர்வு போதுமே!


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு