ஊருக்கு இளைச்சவன் டீ வியாபாரியா..சாராயத்தை தடுக்காதது ஏன்..

வேலூர் மாவட்டத்தில் மலைப்பகுதியில் தடையின்றி நடக்கும் கள்ளச்சாராய விற்பனையை தடுக்க தவறிய போலீசார், ஊருக்குள் கேனில் டீ விற்ற வியாபாரிகளைப் பிடித்து தண்டனை கொடுத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.


வேலூர் மாவட்டம் குடியாத்தம் சுற்று வட்டார மலை கிராமங்களில் தங்கு தடையின்றி சாராயம் காய்ச்சி பாக்கெட்டில் அடைத்து வந்து ஊருக்குள் விற்கப்படுவதாக பல ஆண்டுகளாக புகார்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றது.


இந்த நிலையில் சாராயம் காய்ச்சும் நபர்களை இதுவரை கையும் களவுமாக பிடித்து பொதுமக்கள் முன்னிலையில் நிற்க வைத்து காவல்துறையினர் தண்டனை கொடுத்தது இல்லை..!


அண்மையில் கூட, சாராயம் விற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்களை, துப்பாக்கியால் சரமாரியாக சுட்ட சாராய வியாபாரியை பிடித்து மீடியாக்களிடமோ, பொதுமக்கள் மத்தியிலோ நிற்க வைக்கவில்லை.


கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை கூட ரகசியமாக முகத்தை மூடித்தான் வேலூர் காவல்துறையினர் அழைத்து செல்கின்றனர்.


அதே போல 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்னரும், ஊரடங்கு அமலுக்கு வந்த பின்னரும் அடங்காமல் ஊர் சுற்றும் நபர்களின் வாகனத்தை பறிமுதல் செய்யாமல் எச்சரித்து மட்டுமே அனுப்பி வந்த காவல்துறையினர் திடீரென தண்டனை கொடுத்து சர்ச்சையில் சிக்கி உள்ளனர்.


குடியாத்தம் பகுதியில் மக்கள் அதிக அளவில் கூடுவதற்கு கேன்களில் டீ விற்கும் நபர்கள் தான் காரணம் என்று, அவர்களில் 11 பேரை பிடித்து வந்து டீ கேனை தலையில் சுமக்க வைத்து ஏதோ பரம்பரை சாராய வியாபாரிகளை பிடித்து சாராய கேன்களை தலையில் வைத்திருப்பது போல போஸ் கொடுக்க வைத்தது தான் சர்ச்சைக்கு முக்கிய காரணம்.


சாராய வியாபாரிகளை இதுபோல் பகிரங்கப்படுத்த வேண்டிய போலீசார், வயிற்றுப் பிழைப்புக்கு அதுவும் ஓட்டல்கள், கடைகள் இயங்க அனுமதித்த நேரத்தில் டீ விற்றவர்களை தண்டிப்பது என்ன விதத்தில் நியாயம் என்ற கேள்வி எழுந்துள்ளது.


கொரோனா பரவுதலை கட்டுப்படுத்த தனிமனித விலகல் அவசியம் என்பதை மறுப்பதற்கு இல்லை, ஆனால் கையில் துப்பாக்கியுடன் சுற்றித் திரியும் சாராய வியாபாரிகளின் அட்டகாசத்தை ஒடுக்குவது முக்கியம் என்கின்றனர் அப்பகுதி மக்கள்.


நம்ம போலீஸ் கொடுக்கும் ஊரடங்கு தண்டனை எல்லாம் நல்லாத்தான் இருக்கு,..!


அதற்காக இந்த வெயிலில் வேணுமுன்னே வெளியே வந்து போலீசுகிட்ட அடி வாங்கணும் என்று எங்களுக்கு வேண்டுதலா என்ன ?


என்று கேள்வி எழுப்பும் சாமானிய மக்கள், மருத்துவம் மற்றும் அத்தியாவசிய தேவைக்கு வெளியே வந்தாலும், ஊரடங்கை காரணம் காட்டி போலீசார் வயசு வித்தியாசம் பார்க்காமல் பொதுமக்களை அடிப்பதும், பொழுது போக ராகிங் செய்வதும் ஏற்புடையதல்ல என்று வேதனை தெரிவிக்கின்றனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்