கோவையில் ஆளில்லா ரொட்டிக் கடையைப் பயன்படுத்திக் கொள்ளும் பொதுமக்கள்..

கோவையில் செயல்பட்டு வரும் ஆளில்லா ரொட்டிக் கடையில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் பணத்தை போட்டுவிட்டு, பொதுமக்கள் ரொட்டியை எடுத்துச் செல்கின்றனர்.


கரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கும் வகையில், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.


இந்நிலையில் வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில், பொதுமக்கள் சமூக விலகலைக் கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டு வருகிறது.


பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் நாள்தோறும் காலை முதல் மதியம் வரை விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.


இந்நிலையில் கோவை ரத்தினபுரி 7-வது வீதி தொடர்ச்சியில் உள்ள புதுப்பாலம் அருகே செயல்பட்டு வரும் தனியார் பேக்கரி நிர்வாகத்தினர், ஆளில்லா ரொட்டிக்கடையை கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் நடத்தி வருகின்றனர்.


பேக்கரியின் முன்பு கண்ணாடிப் பெட்டி வைக்கப்பட்டு, அதில் ரொட்டிகளை அடுக்கி வைத்துவிட்டு, அதற்கு அருகில் பணம் போடுவதற்கு சிறிய பெட்டியும் வைத்துள்ளனர்.


இதை யாரும் கண்காணிப்பதில்லை. பொதுமக்கள் ரொட்டிகளை எடுத்துக் கொண்டு, அதற்கான தொகையை அந்தப் பெட்டியில் போட்டுச் செல்கின்றனர்.


இதேபோல் ஏழை, எளிய மக்கள் மற்றும் தெருவோரங்களில் வசிப்பவர்கள் பணம் ஏதுமின்றி ரொட்டியை எடுத்துச் செல்கின்றனர். இதற்கு பேக்கரி நிர்வாகத்தினர் தடை விதிப்பதில்லை.


இதுகுறித்து ரத்தினபுரி கல்கி வீதியைச் சேர்ந்த தி.மணிகண்டன் கூறும்போது, ''கோவையில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு வேலைக்குச் செல்லும் வெளி மாவட்ட, வெளிமாநிலத் தொழிலாளர்கள் இப்பகுதியில் தங்கியுள்ளனர்.


அவர்களுக்கு உணவு தயாரித்து உட்கொள்வதற்கான வாய்ப்பு இல்லை. அவர்கள் தங்களுடைய 3 வேளை உணவுக்கும் ஹோட்டல்களையே நம்பியுள்ளனர்.


இந்நிலையில் இங்குள்ள ரொட்டிக்கடையில் உணவு தேவைப்படுவோர் உரிய பணத்தைப் போட்டு ரொட்டியை எடுத்துச் செல்கின்றனர்.


பணம் இல்லாதவர்கள் இலவசமாக ரொட்டியை எடுத்துச் செல்கின்றனர். இதேபோல் கபசுரக் குடிநீரும் இங்கு வைக்கப்பட்டுள்ளது. இவ்வழியாக வந்து செல்வோர் இக்குடிநீரை அருந்திச் செல்கின்றனர். இதற்குக் கட்டணம் ஏதுமில்லை. பேக்கரி நிர்வாகத்தின் இச்செயல்பாடு பாராட்டுதலுக்குரியது'' என்றார்.


இது குறித்து பேக்கரி மேலாளர் வி.லோகேஷ் கூறும்போது, ''ஊடரங்கு உத்தரவு நடைமுறையில் உள்ள சூழலில் சிலர் உணவின்றித் தவித்து வருகின்றனர்.


கையில் பணமிருந்தும் உணவு கிடைக்காத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். கடந்த 5 ஆண்டுகளாக இப்பகுதியில் இங்குள்ள மக்களை நம்பியே பேக்கரி ஆரம்பித்து நடத்தி வருகிறோம்.


இப்பகுதிக்கு மக்களுக்கு எங்களால் இயன்ற உதவியைச் செய்யும் வகையில், ஆளில்லா ரொட்டிக்கடை நடத்துகிறோம். முதல் நாள் 50 ரொட்டிகள் வைத்தோம். 48 ரொட்டிகளுக்கு உரிய பணம் இருந்தது. 2 ரொட்டிகளை ஏழை மக்கள் எடுத்துச் சென்றனர்.


ரொட்டிக்குத் தேவை அதிகமுள்ளதை அறிந்து நாள்தோறும் 700 முதல் 800 ரொட்டிகள் வரை தயாரித்து சுடச்சுட வைக்கிறோம்.


அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு இங்கிருந்து ரொட்டி எடுத்துச் செல்கின்றனர். இருப்பவர்கள் பணம் போட்டு விட்டு எடுத்துச் செல்லட்டும்; இல்லாதவர்கள் ரொட்டியை எடுத்துச் செல்லட்டும் என்ற நோக்கத்தில் நாள்தோறும் ரொட்டிகளைத் தயாரித்து வைக்கிறோம்.


எவ்வளவு ரொட்டிக்குப் பணம் வந்துள்ளது என்று கணக்குப் பார்ப்பதில்லை. இருக்கும் பணத்தை எடுத்துக் கொள்கிறோம்.


பெரும்பாலும் மக்கள் நேர்மையுடனே பணம் செலுத்தி எடுத்துச் செல்கின்றனர். இதேபோல் கபசுரக் குடிநீர் தயாரித்து வைத்துள்ளோம். இவ்வழியாக வருவோர் அருந்திச் செல்கின்றனர். மன நிறைவாக உள்ளது'' என்றார்.


Popular posts
பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....
Image
‘நீ செத்துப் போ.. நா வீடியோ எடுக்கற’ : மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்ததை வீடியோ எடுத்த கணவன்!!!
Image
”கீழ இறங்குடா.. உன்னை கொன்னுடுவேன்” : மின் இணைப்பை துண்டிக்க சென்ற ஊழியரை கல்லை கொண்டு மிரட்டிய பெண்!!!
Image
சிக்னலில் நின்ற பெண்ணிடம் பணம் கேட்ட திருநங்கை: தர மறுத்ததால் ஆபாச பேச்சு…முகம் சுழிக்க வைத்த செயல்..!!
Image
தி.மு.க மூத்த தலைவரை பொதுவெளியில் விமர்சித்த நிதி அமைச்சர் #PTR - உச்சக்கட்டத்தில் உட்கட்சி பூசல்! https://kathir.news/news/-ptr--1204682
Image