கோவையில் தன்னார்வலருக்கு கொரோனா - அதிர்ச்சியில் மாவட்ட நிர்வாகம்...

கோவையில் ஏழை எளிய மக்களுக்கு நேரடியாக உணவு வழங்கி வந்த தன்னார்வலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது உறவினர்கள் உள்ளிட்ட 72 பேரை பரிசோதனைக்கு உட்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 


துடியலூரை அடுத்த தொப்பம்பட்டியைச் சேர்ந்த 61 வயது நபர் கொரானா அறிகுறியுடன் தனியார் மருத்துவமனையில் கடந்த 4 நாட்களுக்கு முன் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில் கொரோனா இருப்பது உறுதியானது.


விசாரணையில் அவர் கடந்த 23ம் தேதி டெல்லியில் இருந்து கோவைக்கு விமானம் மூலம் வந்தது தெரியவந்தது. தொடர்ந்து அரசு கேட்டுக்கொண்டதற்கு இணங்க இவர் கோவை ஈ எஸ் ஐ மருத்துவமனையில் கொரானா பரிசோதனை செய்துள்ளார்.


முதற்கட்ட பரிசோதனையில் அவருக்கு தொற்று இல்லை என்று தெரியவந்துள்ளது. இருந்த போதும் மருத்துவர்கள் 14 நாட்கள் வீட்டில் தனிப்படுத்தி இருக்க வேண்டும் என கூறி அனுப்பிவைத்துள்ளனர்.


ஆனால் வீட்டிற்கு வந்த இவர் தனிமைப்படுத்தலை கடைபிடிக்காமல் அப்பகுதி இளைஞர்கள் சிலரை சேர்த்துக் கொண்டு உணவு சமைத்து, தனது காரில் சென்று துடியலூர் காவல்துறையினர், அங்குள்ள அரசு மருத்துவமனை மருத்துவ பணியாளர்கள், செவிலியர்கள், நோயாளிகள் மற்றும் பொதுமக்களுக்கு உணவுகள் வழங்கி தன்னார்வலராக செயல்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில்தான் அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.


இதனை அடுத்து அதிர்ச்சியடைந்த மாவட்ட நிர்வாகம், அவர் வசிக்கும் பகுதியில் தடுப்புகள் கொண்டு மறைத்து தடை செய்யப்பட்ட பகுதி என அறிவிப்பு பலகை வைத்துள்ளனர்.


துடியலூர் அரசு மருத்துவமனை மருத்துவ பணியாளர்கள் மற்றும் அவருடன் தொடர்பில் இருந்த உறவினர்கள் என 32 பேருக்கு நேற்று கொரானா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


அவர்களைத் தொடர்ந்து தன்னார்வலரிடம் உணவு வாங்கி உண்ட 40க்கும் மேற்பட்ட காவலர்களுக்கும் பரிசோதனை செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.


கொரோனா பரவுவதால் தன்னார்வலர்கள் யாரும் தன்னிச்சையாக உதவிகள் செய்ய வேண்டாம் என்று அரசு கூறி வருகிறது. இந்த சூழலில் தன்னார்வலர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய அவசியத்தை உணர்த்தியுள்ளது