திருச்சியில் கரோனா சிகிச்சையில் இருந்த இளைஞர் குணமடைந்தார்: சொந்த ஊருக்கு அனுப்பிவைப்பு.
திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கரோனா வைரஸ் தொற்றுடன் அனுமதிக்கப்பட்டிருந்த ஈரோட்டைச் சோ்ந்த இளைஞரும், ராணிப்பேட்டையில் சிகிச்சை பெற்று வந்தவரும் குணமடைந்து வீடு திரும்பினர்.
ஈரோட்டைச் சோ்ந்த 24 வயது இளைஞா் மாா்ச் 22-ம் தேதி துபாயிலிருந்து திருச்சிக்கு விமானத்தில் வந்தார். விமான நிலையத்தில் அவருக்கு நடத்திய மருத்துவப் பரிசோதனையில் சளி, காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த இளைஞா் திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அவரது ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. இந்நிலையில், அவரது பரிசோதனை முடிவு மார்ச் 26-ம் தேதிஅன்று வந்தது. அதில், அந்த இளைஞருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. உடல் நலம் காக்கும் சிகிச்சை, உடல் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவு மருந்து வகைகள் அளிக்கப்பட்டன. மனநல ஆலோசனையும் வழங்கப்பட்டது. இதில் அந்த இளைஞர் நல்லபடியாக உடல் நலம் தேறினார். அவர் சிகிச்சையில் தேறியதும், அவரது மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டதில் தொற்று இல்லை என உறுதியானது.
இதையடுத்து அவர் ஆம்புலன்ஸ் மூலம் ஈரோட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்நிகழ்ச்சியில் மருத்துவர்கள், மருத்துவமனை ஊழியர்கள் அவருக்கு வாழ்த்து கூறி பரிசளித்து அனுப்பி வைத்தனர். அவரும் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
இதேபோன்று ராணிப்பேட்டையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவரும் உடல் நலம் தேறி வீடு திரும்பினார். இவர்கள் வீடு திரும்பினாலும் கண்காணிப்பில் இருப்பார்கள் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.