திருச்சியில் ஒரு வயது குழந்தைக்கு கரோனா பாதிப்பு!

திருச்சி மாவட்டத்தில் மேலும் நான்கு பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. இதனால் திருச்சியில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 39-லிருந்து 43 ஆக அதிகரித்துள்ளது. 


இந்த நான்கு பேரில் 2 பேர் திருச்சி மாநகர பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும், மற்ற 2 பேர் துவரங்குறிச்சியைச் சேர்ந்தவர்கள் என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 


இதில் ஒரு வயது குழந்தையும் அடங்கும். கரோனாவால் பாதிக்கப்பட்டு, ஏற்கனவே சிகிச்சை பெற்று வரும் தந்தையின் மூலம் இக்குழந்தைக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கைக்குழந்தை என்பதால், அதன் தாயாரும் உடனிருக்க வேண்டிய ஒரு இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளது.


கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில் திருச்சி மக்கள் பாதுகாப்பாக இருக்கும் படி திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தியுள்ளார்.


மேலும் நான்கு சக்கர வாகனங்களை அரசாங்க ஊழியர்கள் தவிர பொதுமக்கள் யாரும் பயன்படுத்தி வெளியே வரக்கூடாது என்று கடுமையான உத்தரவு பிறப்பித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது