இலவச முகக்கவசம் வழங்கிய பெண்மணி: ட்விட்டரில் முதல்வர் பாராட்டு

இலவச முகக்கவசம் வழங்கிய பெண்மணிக்குத் தனது ட்விட்டர் பக்கத்தில் முதல்வர் பழனிசாமி பாராட்டுத் தெரிவித்துள்ளார்.


தமிழகத்தில் கரோனா தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மத்திய அரசு அறிவித்துள்ள 21 நாட்கள் ஊரடங்கால் பொதுமக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே முடங்கி இருக்கிறார்கள்.


இந்தச் சமயத்தில் தமிழக அரசு மட்டுமின்றி அரசியல் கட்சிகள், முன்னணி நிறுவனங்கள், திரையுலகப் பிரபலங்கள் எனப் பலரும் உதவிகள் செய்து வருகிறார்கள்.


மேலும்பொதுமக்கள்பலரும் தங்களால் முடிந்த உதவிகளைச் செய்து வருகிறார்கள். இது தொடர்பான வீடியோக்கள் ட்விட்டர் தளத்தில் பரவி வருகின்றன.


அவ்வாறு நவபாலன் என்பவர் தூத்துக்குடியில் தனது தாயார் காவல்துறையினர் மற்றும் பொதுமக்களுக்கு இலவசமாக முகக்கவசம் வழங்கும் வீடியோவை எடுத்துப் பகிர்ந்தார்.


அதில் செய்தி நிறுவனங்களின் ட்விட்டர் கணக்குகளையும், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் ட்விட்டர் கணக்கையும் குறிப்பிட்டு இருந்தார்.


இந்த வீடியோவைப் பார்த்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பாராட்டுத் தெரிவித்துள்ளார். நவபாலனின் ட்விட்டர் வீடியோவைக் குறிப்பிட்டு தன் ட்விட்டர் பக்கத்தில், "தங்கள் தாய்க்கும், அவரைப்போல் கரோனாவை எதிர்க்க அரசோடு சேர்ந்து தங்களால் இயன்ற முயற்சிகளை மனிதநேயத்துடன் மேற்கொண்டு வரும் அனைத்துத் தன்னார்வலர்களுக்கும் எனது இதயம் நிறைந்த பாராட்டுகள்!" என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.


தங்கள் தாய்க்கும், அவரைப்போல் கொரோனாவை எதிர்க்க அரசோடு சேர்ந்து தங்களால் இயன்ற முயற்சிகளை மனிதநேயத்துடன் மேற்கொண்டு வரும் அனைத்து தன்னார்வலர்களுக்கும் எனது இதயம் நிறைந்த பாராட்டுக்கள்!