சென்னை போக்குவரத்து போலீஸாருக்கு நவீன முகப் பாதுகாப்புக் கவசம்..

கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போக்குவரத்து போலீஸாருக்கு நவீன முகப் பாதுகாப்புக் கவசங்களை சென்னை காவல் ஆணையர் வழங்கினார்.


கரோனா வைரஸ் தொற்று பரவமால் தடுக்க நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கை முன்னிட்டு, சென்னை பெருநகர போக்குவரத்துக் காவல் துறையினர் தடுப்புகள் ஏற்படுத்தி வாகனச் சோதனை செய்து, விதிகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.


இப்பணிகளின்போது, போக்குவரத்து காவலர்களுக்குத் தொற்று ஏற்படாமல் இருக்க, முகக் கவசம் (Nasal Mask), சானிடைசர் போன்ற பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. போக்குவரத்துக் காவல்துறையினரின் பாதுகாப்பை மேலும் மேம்படுத்த, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஏ.கே.விஸ்வநாதன் மற்றும் காவல்துறை கூடுதல் இயக்குநர் (சட்டம் & ஒழுங்கு) கே.ஜெயந்த் முரளி ஆகியோர் இன்று சென்னை காவல் ஆணையரகத்தில், போக்குவரத்து போலீஸாருக்கு முகப் பாதுகாப்புக் கவசம் (Face Shield) வழங்கினர்


மூக்கு மற்றும் வாய்ப் பகுதியைப் பாதுகாக்கும் கவசத்துக்கு வெளிப்புறத்தில், முகம் முழுவதையும் பாதுகாக்கும் விதத்தில் இந்த முகப் பாதுகாப்புக் கவசம் (Face Shield) அணியப்படுகிறது. இதனால் கண்கள் மற்றும் முகம் முழுவதிலும் துளி தொற்று (droplet infections) பரவாமல் இருக்கும்.


முதற்கட்டமாக 3,000 முகப் பாதுகாப்புக் கவசங்கள் (Face Shield) கொள்முதல் செய்யப்பட்டு அனைத்து சென்னை போக்குவரத்து போலீஸாருக்கும் வழங்கப்பட்டுள்ளது. இக்கவசங்களைத் தொடர்ந்து சுத்தம் செய்து அணிய முடியும். மொத்தம் 24,000 முகப் பாதுகாப்புக் கவசங்கள் (Face Shield) கொள்முதல் செய்து போக்குவரத்துக் காவல் துறையினருக்கு வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.


இந்தக் கவசங்களைத் தவறாமல் பணியில் இருக்கும்போது அணிய போக்குவரத்து போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதை அணியாமல் பணியில் ஈடுபடும் போலீஸாருக்கு சார்ஜ் கொடுக்கப்படும் என உயர் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.


இந்நிகழ்ச்சியில், சென்னை போக்குவரத்து கூடுதல் ஆணையர் அருண் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.