நூதன தண்டனை என்ற பெயரில் மக்களை அவமரியாதையுடன் நடத்தக்கூடாது- டிஜிபி திரிபாதி
ஊரடங்கு உத்தரவை மீறி, வெளியே நடமாடுபவர்களை ஒருபோதும் அவமரியாதையுடன் நடத்தக்கூடாது என்று காவலர்களுக்கு, டிஜிபி திரிபாதி அறிவுறுத்தி உள்ளார்.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக சென்னை - டிஜிபி அலுவலகத்தில் காவல் துறை உயரதிகாரிகளுடன் திரிபாதி ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தின்போது, நூதன தண்டனை என்ற பெயரில், மக்களை அவமதிக்க வேண்டாம் என அவர் கேட்டுக் கொண்டார்.
தவிர்க்க முடியாத காரணத்தால் மட்டுமே மக்கள் வெளியே வருவதாக கூறிய அவர், விபரீதத்தை எடுத்து கூறி, வீட்டுக்கு திரும்பி செல்ல அறிவுறுத்துமாறு உத்தரவிட்டார்.
எவர் ஒருவரையும் மரியாதை குறைவாக நடத்தக்கூடாது என கேட்டுக்கொண்ட திரிபாதி, வெளியே இரு சக்கர வாகனங்களில் வருபவர்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும், விசாரணை நடத்தும் போது, தனி நபர் இடைவெளியை போலீசார் கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.