சிவகங்கை, ராமநாதபுரத்தில் கரோனா பாதிப்பில் இருந்து ஆறு பேர் குணமடைந்தனர்

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த ஆறு பேர் குணமடைந்தனர்.


புதுடெல்லி மாநாட்டிற்கு சென்று வந்த சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 46 பேர் கடந்த மார்ச் மாத இறுதியில் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.


அவர்களில் திருப்பத்தூரைச் சேர்ந்த 3 பேர், இளையான்குடி, தேவகோட்டையைச் சேர்ந்த தலா ஒருவர் என 3 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.


இதுதவிர அவர்களுடன் தொடர்புடைய 6 பேருக்கும் கரோனா தொற்று கண்டறியப்பட்டு, 11 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.


மேலும் கரோனா தொற்று இருந்த ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த இருவர் உட்பட 7 பேர் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.


இந்நிலையில் திருப்பத்தூரைச் சேர்ந்த மூவர், தேவகோட்டையைச் சேர்ந்த ஒருவர், பரமக்குடியைச் சேர்ந்த இருவர் என 6 பேர் குணமடைந்தனர்.


ஆறு பேரும் இன்று சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருந்து அவரவர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களுக்கு ஆட்சியர் ஜெயகாந்தன் பொன்னாடை அணிவித்தார்.


மருத்துவக் கல்லூரி டீன் ரத்தினவேல், சுகாதார துணை இயக்குநர் யசோதாமணி, நிலைய மருத்துவ அலுவலர் மீனாள் ஆகியோர் உடனிருந்தனர்.


தற்போது கரோனாவால் பாதிக்கப்பட்ட சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 7 பேர், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 3 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


மேலும் கரோனா பாதிப்பின்றி சிறப்பு வார்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்த 21 பேரும் ஏற்கனவே வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.