அரசு மருத்துவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணி!

கொரோனா தொற்றால் உயிரிழக்கும் மருத்துவர்களின் உடலை அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் அரசு மருத்துவர்கள் கருப்பு பட்டை அணிந்து பணியாற்றி வருகின்றனர். 


கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவர்களுக்கு, தங்கள் உயிரை பணயம் வைத்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.


அவர்கள், போற்றப்பட வேண்டியவர்களாக உள்ள நிலையில், சென்னை கீழ்ப்பாக்கத்தில் கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர் சைமன் ஹர்குலசின் உடலை அடக்கம் செய்யவிடாமல் தடுத்த சம்பவம், சக மருத்துவர்கள் மத்தியில் வேதனையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. இதன் எதிரொலியாக கொரோனா தொற்றால் உயிரிழக்கும் மருத்துவர்களின் உடலை அரசு மரியாதையுடன் அடக்கம் அல்லது தகனம் செய்ய வேண்டும், அவர்களின் குடும்பத்தினருக்கு 48 மணி நேரத்தில் நிவாரணத் தொகை வழங்க வேண்டும், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் 14 நாள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை அரசு மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


தங்களது கோரிக்கைகளை அரசுக்கு தெரியப்படுத்தும் விதமாக சென்னையில் அரசு மருத்துவர்கள் கருப்புப் பட்டை அணிந்து பணியாற்றி வருகின்றனர்.


மேலும், கொரோனா சிகிச்சை பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவ பணியாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வலியுறுத்தி இன்றிரவு 9 மணிக்கு மெழுகுவர்த்தி எந்தவும் அழைப்பு விடுத்துள்ளனர்.