கொரோனா சோதனை செய்ய சென்ற மருத்துவக்குழுவினர் மீது கிராமத்தினர் தாக்குதல்!

கோவில்பட்டி அருகே கொரோனா பரிசோதனைக்கு சென்ற மருத்துவக் குழுவினர் மீது கிராம மக்கள்  தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கயத்தாறு அய்யனார்வூத்தை சேர்ந்த ஒருவர் டெல்லியில் நடைபெற்‌ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திரும்பியுள்ளார்.  அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதனால் அய்யனார்வூத்து தனிமை படுத்தபட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு பாதுகாப்பு வளையத்தில் கொண்டுவரப்பட்டுஉள்ளது.


இந்நிலையில் நேற்று காலையில் மருத்துவ குழுவினர் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினருக்கு பரிசோதனை செய்வதற்காக தாசில்தார் பாஸ்கரன், இன்ஸ்பெக்டர் முத்து ஆகியோருடன் சென்றனர். அப்போது அப்பகுதி மக்கள் ஊருக்குள் வர விடாமல் தடுத்து, நிறுத்தி ரகளையில் ஈடுபட்டனர்.


திடீரென மருத்துவ குழுவினர் மீது ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியது. இதில் சுகாதார ஆய்வாளர் காளிராஜை தாக்கி சட்டையை கிழித்து செல்போனை பறித்து பைக்கை சேதப்படுத்தினர். உடனே சுதாரித்துக் கொண்ட தாசில்தார் பாஸ்கரன் மற்றும் இன்ஸ்பெக்டர் முத்து ஆகியோர் மருத்துவ குழு உதவியுடன் குடும்ப உறுப்பினர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


இந்நிலையில் மருத்துவ குழு தாக்கப்பட்ட சம்பவம் தெரிந்து கயத்தாறு அரசு ஆஸ்பத்திரியில் சகபணியாளர்கள் கூடினர். அதன் பின்னர் சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள், கிராம செவிலியர்கள் ஆகியோருக்கு பாதுகாப்பு வேண்டுமெனவும், தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினர்.


மேலும், காவல்நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.


கோவில்பட்டி டி.எஸ்.பி.ஜெபராஜ், புகார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இந்நிலையில் அக்கிராமத்தை சேர்ந்த 12 பேர் மீது கயத்தார் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.