கொரோனா' பரிசோதனை செய்யப்பட்ட பெண் திடீரென உயிரிழந்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை, இ.எஸ்.ஐ.,மருத்துவமனை, சிறப்பு 'கொரோனா' மையமாக மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கோவை மதுக்கரை பகுதியை சேர்ந்த, 52 வயது பெண் காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக, இங்கு அனுமதிக்கப்பட்டார். 'கொரோனா' இருக்கலாம் என்ற சந்தேகத்தில், டாக்டர்கள் அப்பெண்ணிடம் சளி மற்றும் ரத்த மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பினர்.


தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், நேற்று திடீரென உயிரிழந்தார். பரிசோதனை முடிவுகள் வெளிவருவதற்குள், அவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இ.எஸ்.ஐ., மருத்துவமனை டீன் நிர்மலா கூறுகையில்,''தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, நிலைமை மோசமான பிறகுதான் அவர் இங்கு அனுமதிக்கப்பட்டார். மூச்சு திணறல் இருந்ததால், ஐ.சி.யு.,வில் அனுமதித்து, வென்டிலேட்டர் மூலம் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது.


ஆனால், பரிசோதனை முடிவுகள், வருவதற்குள் அவர் உயிரிழந்துவிட்டார். மேலும், அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதற்கு வாய்ப்புகள் குறைவு. அப்பெண்ணுக்கு, இருதய நோய் மற்றும் நுரையீரல் பழுதாகி இருந்தது.